தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.


அப்போது உடலை ஆரோக்கியமாகப் பேணுவது குறித்து இயக்குநர் அவர் பேசியது அங்கிருந்தோரை ஈர்த்தது. “ஹெல்த் இன்சூரன்ஸ் இன்று அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான விஷயமா இருக்கு. ஆரோக்கியம் என்பது வர்க்க வித்தியாசங்கள் தாண்டி எல்லா நிலைகளில் இருப்பவர்களுக்கும் தேவைப்படும் ஒன்று.


பெண்கள் இப்படி செய்யறாங்க...


ஆனால் இதை நாம் தவிர்த்துக் கொண்டே இருக்கிறோம். இரவு ஒரு பார்ட்டிக்கு போகிறோம் என்றாலும் 4 பேர் சேர்ந்தால் 2000 ரூபாய் செலவு செய்கிறோம். ஆனால் காலை எழுந்து, ஜிம் போன்ற இடங்களில் சேர்ந்து ஒரு மணி நேரம் செலவு செய்து நம்மை உந்தும் விஷயங்கள் பற்றி நாம் யோசிப்பது இல்லை. அதில் தான் நாம் கடைசியாக இருக்கிறோம். 


இந்தக் காசு இருந்தால் பசங்களுக்கு ஏதாவது செய்யலாம், வீட்டுக்கு ஏதாவது செய்யலாம் என நினைப்போம்.  ஆண்களை விட பெண்கள் இதை இன்னும் அதிகமாக செய்கிறார்கள். என் அம்மா, மனைவியில் தொடங்கி எல்லா பெண்களுமே அப்படிதான். ஒன்று திட்டமிட்டு சமைக்க வேண்டும், இல்லையென்றால் மிச்சமானால் பரவாயில்லை வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்ற எண்ணம் வேண்டும். ஆனால் நாம் அதை செய்வதில்லை.


மிச்சமாகக்கூடாது நாம் சாப்பிட்டுவிடலாம், நேத்து வச்சதை சாப்பிட்டுவிடலாம் என தான் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள்.  நாம் எளிமையாக செய்யக்கூடிய பல செயல்கள் உள்ளன. உணவு உண்பதிலேயே பலவும் நம் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நாம் கார்ப்போஹைட்ரேட் எடுக்கும்போது இது அதிகரிக்கிறது.


சாப்பாட்ட குறைங்க...


நாமெல்லாம் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு உடன் கொஞ்சம் காய்கறி சாப்பிடுகிறோம். ஆனால், நார்ச்சத்து, புரோட்டின் அதன் பின் கார்ப்போஹைட்ரேட் என சாப்பிட்டால் இன்சுலின் அவ்வளவு அதிகரிக்காது என்கிறார்கள்.


நாம் சாப்பிட ஆரம்பிக்கும்போது நிறைய காய்கறிகள் உண்டுவிட்டு கொஞ்சம் உணவு சாப்பிடலாம் . இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. பிரியாணி சாப்பிட்டால் முதலில் கறியை சாப்பிட்டுவிட்டு அதன்பின் கொஞ்சமாக பிரியாணி சாப்பிடலாம். 


எவ்வளவு காய்கறிகள் சாப்பிடுகிறோமா அவ்வளவு நல்லது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை (Processed Sugar) உலகின் போதை தரும் பொருள்களில் ஒன்று. அதுதான் ஒவ்வொரு நோய்க்கும் காரணம். பல வியாதிகளும் சர்க்கரையால்  வந்தவை என பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன. இந்த சர்க்கரையை தவிர்க்க முடிந்தால் நல்லது. நாம் அதைக் குறைத்தாலே இயற்கையாகவே நாம் ஆரோக்கியமாக உணருவோம்.


நேரத்தில் தூங்கி நேரத்தில் முழிப்பது மற்ற துறைகளுக்கு சொல்ல முடியும், ஆனால் சினிமா துறைக்கு சொல்ல முடியாது. எப்போ தூங்கினாலும் நல்லா தூங்கணும் என்றால், நாம் சரியாக சாப்பிட்டாலே, சரியான தூக்கம்  வரும். 


நான் அங்கங்கு படித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், என் ட்ரெய்னர் சொன்னவற்றை வைத்து தான் பேசுகிறேன். பழங்களை சாப்பிடவேண்டுமென்றால் பழமாகவே சாப்பிடலாம், ஜூஸே அதிக சர்க்கரை உடையது, அதில் இன்னும் 2 ஸ்பூன்கள் சர்க்கரை போட்டுக் கொடுப்பார்கள். அது விஷம்.


முக்கியமாக நாம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 20 நிமிடங்கள் மேல் ஒரு இடத்தில் அமரக்கூடாது என்கிறார்கள். நாம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது நாம் 10 நிமிடங்கள் நடக்க வேண்டும். இதெல்லாம் நாம் என் வாழ்க்கையில் கொண்டு வர முயற்சித்து வருகிறேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்” எனப் பேசியுள்ளார்.