கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த கன்னட திரையுலகுக்கு மட்டுமல்லாமல் இந்தியா திரையுலகுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த அதிர்ச்சி காரணம் 46 வயதில் வந்த இறப்புதான். அதுவும் உடலை ஃபிட்டாகவும், எப்போதும் ஆக்டிவாகவும் இருக்கும் ஒரு மனிதர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது வேதனையின் உச்சக்கட்டம். தனது ரசிகர்களுக்கு முன்னோடியாக இருக்கும் புனீத் ராஜ்குமார், அவர்களும் தங்களின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார். அதற்காக தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார் புனீத். எந்த வயதிலும் எது வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு வயது ஒரு தடையில்லை இல்லை என்று தனது திரைப்படம் மற்றும் நிஜவாழ்க்கையிலும் நிரூபித்து காட்டியவர். புனீத்தின் மறைவுக்கு அவரது பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், அவரின் ஓர்க் அவுட் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இவ்வளவு ஃபிட்டாக இருக்கும் மனிதருக்கா, சீக்கிரம் மரணம் வந்து சேர்ந்தது என்று வீடியோ கண்ட ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
கன்னடத் திரையுலகின் மூத்த நடிகர்கள் ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோரின் மகனான புனீத் ராஜ்குமார் தனது திரையுலகப் பயணத்தைக் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கியவர். 1985ஆம் ஆண்டு, கன்னட மொழியில் வெளியான `பெட்டடா ஹூவு’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் புனீத் ராஜ்குமார். யுவரத்னா, ராஜகுமாரா, அஞ்சனி புத்திரா, பவர், அப்பு முதலான 29 திரைப்படங்களில் நடித்தவர் புனீத் ராஜ்குமார். தனது ரசிகர்களால் அன்போடு `அப்பு’ என்று அழைக்கப்பட்டவர். அவரது எதிர்பாரா மரணம் அவரது பல கோடி ரசிகர்களின் இதயங்களில் கனத்த வலியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் இந்தியத் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகவும் கருதப்படுகிறது.