கன்னட சினிமாவின் பிரபல நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் கன்னட சினிமா உலகில் இயங்கி வரும் இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் 'தர்ஷன்'.
இவரது க்ராந்தி எனும் திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு திரைக்கு வர உள்ளது. இயக்குநர் ரவி கிருஷ்ணா இயக்கும் இப்படத்துக்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னதாக இப்படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளின்போது நடிகர் தர்ஷனின் மிது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹோஸாபேட் எனும் இடத்தில் ப்ரொமோஷன் பணிகளில் தர்ஷன் ஈடுபட்டிருந்த இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரும் மக்கள் திரளுக்கு மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், முதலில் பெரும் அதிர்ச்சியடைந்த தர்ஷன், தொடர்ந்து சமாளித்து ப்ரொமோஷன் பணிகளை முடித்து திரும்பியுள்ளார்.
கர்நாடக ஊடகங்களுடன் தொடர்ந்து மோதல் போக்கை தர்ஷன் கடைப்பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக தனது தனிப்பட்ட வாழ்வில் தலையிடும் ஊடகங்களை மோசமாக சாடி தர்ஷன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
மேலும் முன்னதாக பொழுதுபோக்கு தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அதிர்ஷ்ட தேவி எப்போதும் கதவைத் தட்டுவதில்லை, அவள் தட்டும்போது, அவளைப் பிடித்து, அவளை உங்கள் படுக்கையறைக்குள் இழுத்து, நிர்வாணமாக்கி விடுங்கள். அவளுக்கு நீங்கள் ஆடைகளைக் கொடுத்தால் வெளியே சென்று விடுவாள்” என ஆபாசமாகப் பேசியிருந்தார்.
தர்ஷனின் இந்தக் கருத்து ட்விட்டரில் கடும் விமர்சனத்துள்ளாகி, கன்னட சினிமா ரசிகர்கள் தர்ஷன் மன்னிப்பு கேட்கவேண்டும் எனத் தொடர்ந்து கோரி வந்தனர்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பல முன்னணி செய்தி சேனல்கள் க்ராந்தி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தனர். இந்நிலையில், தர்ஷன் மீது செருப்பு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.