'தாம் தூம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாடல் அழகி கங்கனா ரனாவத். பாலிவுட்டில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவர், அண்மையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்திரா காந்தியாக கங்கனா :
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை நாடு முழுவதும் எமர்ஜென்சியை அமல்படுத்தியதை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தை இயக்கி இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத். மேலும் இந்த படத்தில் அனுபம் கெர் , சதீஷ் கவுசிக், ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.ரித்தேஷ் ஷா இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு:
மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் 'எமர்ஜென்சி' படத்தின் படப்பிடிப்பிற்காக நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த மக்களவை செயலாளரிடம் கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளார் கங்கனா ரனாவத். அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் மற்றும் சன்சாத் டிவி மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுக்க அனுமதி உள்ளது.
தனியார்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வீடியோ எடுக்க அனுமதியில்லை. அப்படியிருக்கையில் அங்கு படப்பிடிப்பு நடத்த கோரி கங்கனா ரனாவத், மக்களவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.