நடிகர் தர்ஷனை 7 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைக்க உத்தரவு
ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலி பவித்ராவை ஏழு நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைத்து விசாரணை மேற்கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேணுகா சுவாமி கொலை
காமாட்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மருந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ரேணுகா சுவாமியின் உடல் என்றும், மழைநீர் வடிகாலில் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்
ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டதாக தடயவியல் துறை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு 10 நபர்களை காவல்துறை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனை விசாரணை செய்தனர். ஏற்கனவே விஜயலட்சுமி என்பவருடன் திருமண உறவில் இருந்துகொண்டே நடிகை பவித்ரா கெளடாவை காதலித்து வருவது , விலங்குகளை வேட்டையாடுவது , என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகர் தர்ஷன்.
இப்படியான நிலையில் தற்போது ரேணுகா சுவாமியின் கொலை வழக்கில் அவர் பெயர் அடிபட்டுள்ளது கன்னட திரையுலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்ஷனின் காதலியான பவித்ரா கெளடாவை ரேணுகா சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசியதாகவும் இதனால் தர்ஷன் கூலிப்படையை ஏவி ரேணுகாவை கொலை செய்திருக்கலாம் என்று இந்த வழக்கில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த கொலையில் தர்ஷன் தவிர இன்னும் பத்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். கொலை நடந்த இடத்தில் தர்ஷன் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 11-ஆம் தேதி தர்ஷனை கைது செய்த காவல் துறையினர் உடனடியாக அவரது காதலியான பவித்ரா கெளடாவையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை ஏழு நாட்கள் காவல் துறை கண்காணிப்பில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.