யூடூபில் பத்து மில்லியன் விவ்ஸ்களைக் கடந்து டிரெண்டாகி வருகிறது யுவனின் இசையில், முத்தையாவின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்து திரைக்கு வரவிருக்கும்  விருமன் படத்தின் “கஞ்சா பூவு கண்ணால” பாடல்.


கிராமத்து காதலும் யுவனும்


யுவன் சங்கர் ராஜாவின் இசை என்றாலே, அத்திரைப்படத்தின் பாடல்களும், பின்னனி இசையும் தனி கவனம் பெறுவது வழக்கம். அதுவும் கிராமத்து கதைக்களம், அதோடு ஒன்றிய காதல் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் பாடல்களில், பருத்திவீரன் திரைப்படத்தில் வரும், ’அறியாத வயசு புரியாத மனசு மற்றும் அய்யய்யோ’ பாடல்கள் இல்லாமல் இருக்காது. கிராமத்து கதை என்றால் கொஞ்சம் இறங்கி வேலை செய்யும் யுவன் சங்கர் ராஜா, விருமன் படத்திலும் அதையே செய்திருக்கிறார். அவரது இசையில் மே 24ம் தேதி யூடூபில் லிரிக் வீடியோவாக ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியானது. பாடல் வெளியான இரண்டு வாரங்களில் பத்து மில்லியன் விவ்ஸ்களைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இரண்டு லட்சம் லைக்குகளைத் தாண்டியிருக்கிறது.  


முத்தையாவும் காதல் பாடல்களும்


 தமிழ் சினிமாவில் கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கியவர்  இயக்குனர் முத்தையா. தென்தமிழகத்தினை மையமாகக் கொண்ட கதைகளையே தொடர்ந்து திரைப்படமாக எடுத்து வருபவர்  இயக்குனர் முத்தையா. இவரது படங்கள் வணிக ரீதியான வெற்றி, தோல்வி என்பதை கடந்து, இவரின் திரைப்படங்களில் உள்ள பாடல்கள் தமிழகம் முழுவதும் கவனம் ஈர்க்கக் கூடியது. குறிப்பாக கிராமத்து காதல் கதை, அந்த காதலை மேலும் அழகாக்கும் பாடல்கள் என, இயக்குனர் முத்தையாவின் படங்களின் பாடல்களுக்கு தனி வரவேற்பு எப்போதும் உள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் எனும் திரைப்படத்தினை இயக்கியிருந்தார். தற்போது இவர்கள் விருமன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தனது படங்களில் எந்த இசையமைப்பாளர் பணியாற்றினாலும், அவர்களிடத்திலிருந்து ஒரு காதல் ஹிட் பாடலை பெற்று ரசிகர்களுக்கும் காதலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடுவார். ஏற்கனவே கொம்பன் படத்தில் ஜீ.வி. பிரகாஷ் இசையில் ‘கருப்பு நிறத்தழகி’ பாடல் தனி கவனம் ஈர்த்தது.


ஷங்கரின் மகள் மற்றும் சூர்யா


விருமன் படத்திலிருந்து வெளிவந்திருக்கும் இப்பாடலை, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். கருமத்தூர் மணிமாறன் பாடலை எழுதியள்ளார்.  மேலும் பிரமாண்ட இயக்குனர் எனச் சொல்லப்படும் ஷங்கர் அவர்களின் மகள் அதிதி ஷங்கர், இத்திரைப்படத்தின் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.  இத்திரைப்படத்தினை நடிகர் கார்த்தியின் அண்ணனும் தமிழ் சினிமாவின் நடிகருமான சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.