“மண் காப்போம்” இயக்கத்துடன் கைகோத்த மகாராஷ்டிரா.. உத்தரவுக்கு நன்றி தெரிவித்த ஜக்கி வாசுதேவ்..

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

”மண் காப்போம்” இயக்கம்:

உலகெங்குமுள்ள மக்களை மண் ஆரோக்கியத்திற்காக ஒன்றுகூடி குரல்கொடுக்க ஊக்கப்படுத்தவும், விவசாய மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க தேசிய அளவிலான கொள்கைகள் உருவாக்கவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, 'மண் காப்போம்' இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பைக்கில் 100 நாள்,  30 ஆயிரம் கி.மீ., பயணம் மேற்கொண்டு வருகிறார். பல நாடுகளை பைக்கிலேயே கடந்து “மண் காப்போம்” இயக்கம் குறித்து பேசி வந்த நிலையில், தற்போது, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் வழியாகவும் பயணித்து வருகிறார்.


உத்தரபிரதேசம் ஆதரவு:

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில், மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போது மண் காப்போம் இயக்கத்துக்கு உ.பி.,யிலுள்ள, 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று கூறியிருந்தார்.

மஹாராஷ்டிரா ஆதரவு:

இந்த நிலையில்,  இந்தியாவின் 5-வது மாநிலமாக மஹாராஷ்ட்ரா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் நேற்று (ஜூன் 12) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் மற்றும் மஹாராஷ்டிர சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர். முன்னதாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு சென்ற ஜக்கி வாசுதேவ், மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறைக்கு உகந்த, அறிவியல் தீர்வுகள் அடங்கிய ‘கொள்கை விளக்க கையேட்டை’ அவரிடம் வழங்கினார்.

உத்தவ் தாக்கரே ட்வீட்:

இது தொடர்பாக, மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,  “முதல்வர் உத்தவ் பாலசாஹேப் தாக்கரே அவர்களை சத்குரு இன்று சந்தித்து  ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து பேசினார். மண் வளத்தை பாதுகாப்பதற்காக இவ்வியக்கத்திற்கு மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் தெரிவித்தார்” என பதிவிடப்பட்டுள்ளது.

ஜக்கி வாசுதேவ் நன்றி:

இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜக்கி வாசுதேவ், “நமஸ்காரம், மாண்புமிகு முதல்வர் திரு. உத்தவ் தாக்கரே, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. வளர்ச்சி மாநிலமான மஹாராஷ்ட்ரா, உங்களுடைய தலைமையின் கீழ் ஆரோக்கியமான மண்ணையும், வளமான விவசாய சமூகத்தையும் உருவாக்கும் பணியில் சிறந்த வழிகாட்டியாக திகழட்டும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், அமைச்சர் ஆதித்யா தாக்கரே வெளியிட்டுள்ள பதிவில், “சத்குரு அவர்கள் எங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்ததை பெருமையாக கருதுகிறோம். அவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் மண் காப்போம் இயக்கம் குறித்து கலந்துரையாடினார். இவ்வியக்கத்திற்கும், எங்களது நிலைத்த வளர்ச்சிக்கான குறிக்கோள்களுடன் ஒத்துப்போகும் பிற முன்னெடுப்புகளுக்கும் மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

13000 ஆண்டுகள் தேவைப்படும்:

மண் காப்போம் இயக்கம் சார்பில் மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 10.000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் ஜக்கி வாசுதேவ் பேசுகையில், “15 முதல் 18 இன்ச் வரையிலான மேல்புற மண் தான் பூமியின் செழிப்பிற்கும் நாம் உயிர் வாழ்வதற்கும் உதவியாக உள்ளது. கடந்த 40 முதல் 50 வருடங்களில் நாம் சுமார் 52 சதவீதம் மேல்புற மண்ணை இழந்துவிட்டோம்.  இப்போது இருக்கும் மக்கள் தொகையை கொண்டு பூமியில் ஒரு இன்ச் வளமான மண்ணை உருவாக்க 13,000 வருடங்கள் தேவைப்படும். அந்தளவிற்கு இது கடினமானது.

கடந்த காலத்தில் நம் நாடு எதிர்கொண்ட கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள ‘பசுமை புரட்சி’ உதவியது. ஆனால், அது தற்காலிகமான தீர்வு தான். மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு நாம் நம்முடைய விவசாய கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ நாம் அனைவரும் மண் அழிவிற்கு காரணமாக உள்ளோம். எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்” என்றார்.


சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. ஆதித்யா தாக்கரே பேசுகையில், “நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். மண் வளத்தை மீட்டெப்பதில் நாம் இந்த தலைமுறையிலேயே செயல் செய்ய வேண்டும், இல்லாவிட்டால், நமக்கு நல்ல எதிர்காலம் இருக்காது.” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் ஜூஹி சாவ்லா,  மெளனி ராய், இசை கலைஞர்கள் மீட் பிரதர்ஸ் உட்பட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

Continues below advertisement