கேரள முதல்வர் பினராயி விஜயன் விமானத்தில் பயணம் மேற்கொண்டபோது, அதிலிருந்த இரண்டு இளைஞர் காங்கிரஸார் கோஷம் எழுப்பினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தலில் பினராயி விஜயன் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்திருப்பது குறித்து அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.


கண்ணூரிலிருந்து திருவனந்தபுரம் சென்ற விமானத்தில், பினராயி விஜயனுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. விமானம் திருவனந்தபுரம் அடைந்தபோது, இருவரும் கேரள முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது விமானத்தில் அவருடன் இருந்த இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இ.பி. ஜெயராஜன், அவர்களை தள்ளினார். இது பற்றிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.






இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நவீன் குமார் மற்றும் தொகுதி தலைவர் ஃபர்தீன் மஜீத் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.  பின்னர், அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.


இந்த சம்பவத்தை விமான பாதுகாப்பில் ஏற்பட்ட விதி மீறலாக கருத வேண்டும் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிறுவனம், விமான நிலைய அலுவலர்கள், பயணிகள் என யாரேனும் ஒருவர் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் இருவருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்படும்.


இதுகுறித்து ஜெயராஜன் பேசுகையில், "பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே விமானங்களுக்குள் இதுபோன்ற போராட்டங்களை நடத்துகின்றன. போராட்டம் நடத்திய இருவரும் மதுவருந்தி இருந்தனர். இடது முன்னணியின் சிறப்பான நிர்வாகத்தை கண்டு விரக்தி அடைந்த காங்கிரஸ் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது" என்றார்.


பினராயி விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக கேரளா முழுவதும் கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறது. பினராயி விஜயனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட போதிலும், அவரது சொந்த மாவட்டமான கண்ணூரில் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது. பினராயி பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு நிற முகக்கவசங்கள் அணிவதற்கு காவல்துறையினர் கடும் கட்டுபாடு விதிக்கப்பட்டதற்கு எதிராக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். 


இந்த நிலையில், எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என பினராயி விளக்கம் அளித்துள்ளாார். மேலும், விமானத்தில் நடத்தப்பட்ட போராட்டம் திட்டமிடப்பட்ட சதி என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.