நடிகர்கள் அஜித், ரஜினிகாந்தை இயக்கியதன் தொடர்ச்சியாக தற்போது சூர்யாவை வைத்து கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.


சூர்யாவுடன் இணைந்த நட்சத்திரங்கள்


நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இருவரது திரைப்பயணத்தில் இல்லாத வகையில் பான் இந்தியா படமாக இப்படம் மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாராகி வருகிறது. நடிகை திஷா பதானி இப்படத்தின் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், மற்றொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூலை 23ஆம் தேதி இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


சுமார் 13 கதாபாத்திரங்களில் கங்குவா அரசனாக நடிகர் சூர்யா நடித்து வரும் நிலையில்,  இப்படத்தில் யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.


வில்லன் யார்?


சரித்திரப் பின்னணியில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட ஹீரோவாகத் தோன்றும் நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக தோன்றுவது யார் என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்தது.


இந்நிலையில், கங்குவா படத்தின் வில்லன் நடிகர் பற்றிய சுவாரஸ்யத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் சமீபத்தில் கங்குவா படக்குழுவில் இணைந்த நிலையில், நட்ராஜ் இப்படத்தில் வில்லனாக நடிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.




இயக்குநர் மாரி செல்வராஜின் கர்ணன் படத்தில் மோசமான காவல் துறை அதிகாரியாக தனுஷூக்கு எதிராக நட்டி நடித்த நிலையில், அவரது கதாபாத்திரம் பாராட்டுகளை அள்ளியது. இந்நிலையில் தற்போது கங்குவா சூர்யாவுக்கு எதிராக வில்லனாக நட்டி கலக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ பற்றிய அப்டேட் இன்று காலை வெளியானது. 


கங்குவா க்ளிம்ஸ் அப்டேட்


அதன்படி, “ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது. அரசன் வருகிறான்” எனும் கேப்ஷனுடன், வடுக்களுடன் இருக்கும் சூர்யாவின் கை இருக்கும் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்திருந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.


கங்குவா என்ற தலைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில்,  கோவா, பிஜூ தீவுகள், கேரளா, எண்ணூர் துறைமுகம்,  கொடைக்கானல், சென்னை  ஆகிய பகுதிகளில் இதுவரை படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.


இந்நிலையில்,  படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கங்குவா திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர்.