நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம்   ‘கங்குவா’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.


சூர்யாவின் கரியரில் பிரம்மாண்டமான படம்


சூர்யாவின் 42ஆவது படமான இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.  10 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்கூரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. 


சிங்கம் பட பாகங்களில் நடிகர் சூர்யாவுக்கு தரமான இசையை வழங்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், சிறு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் சூர்யாவுடன் கைக்கோர்த்துள்ளார். 


13 கதாபாத்திரங்களில் சூர்யா இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், இன்று இப்படத்தின் க்ளிம்ஸ் பற்றிய அப்டேட் வெளியாகும் என நேற்று மாலை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது கங்குவா பட அப்டேட்டை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பகிர்ந்துள்ளது.


வெறித்தனமான போஸ்டர்


அதன்படி  “ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது. அரசன் வந்துவிட்டான்” எனும் கேப்ஷனுடன், வடுக்களுடன் இருக்கும் சூர்யாவின் கை புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.


 






மேலும் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி கங்குவா க்ளிம்ஸ் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சூர்யா பிறந்தநாளில் சூப்பர் அப்டேட்


சரித்திரப் பின்னணியில் இப்படம் உருவாகிவரும் நிலையில், சூர்யாவின் முகத்தைக் கூட காண்பிக்காமல் படக்குழு தொடர்ந்து அப்டேட் வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் சூர்யா பிறந்தநாள் அன்று  ப்ரோமோ வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.


இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான வரும் 23ஆம் தேதியை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர். 


முன்னதாக கோவா, பிஜூ தீவுகள், எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல், சென்னை  உள்ளிட்ட பகுதிகளில்  கங்குவா படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கங்குவா படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.