தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர் சூர்யா. முன்னணி நடிகரான சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் கங்குவா. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் நேற்று உலகெங்கும் ரிலீசானது.
ரிலீசான கங்குவா:
தீபாவளிக்கு ரிலீசாக வேண்டிய நிலையில், வேட்டையன் படம் வெளியீடு காரணமாக கங்குவா படம் நேற்று வெளியானது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா படம் வெளியானதால் ரசிகர்கள் நேற்று திரையரங்கில் குவிந்தனர்.
700 ஆண்டுகளுக்கு முந்தைய கதை, வித்தியாசமான திரைக்கதை, பிரம்மாண்ட சண்டை காட்சிகள் என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை கங்குவா படத்தின் ப்ரமோஷன் ஏற்படுத்தியது. படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முதல் படக்குழுவினர் அனைவரும் படத்தின் வெற்றி நிச்சயம் உறுதி என்று மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்தனர்.
போட்ட காசை எடுக்குமா?
இந்த நிலையில், திரையரங்கில் நேற்று வெளியான கங்குவா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் கங்குவா படம் முதல்நாளான நேற்று உலகம் முழுவதும் ரூபாய் 40 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
பொதுவாக திரையரங்குகளுக்கு வெள்ளி இரவு காட்சி முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு காட்சி வரை ரசிகர்கள் கூட்டம் திரளாக இருக்கும். இதனால், இன்று முதல் நாளை மறுநாள் இரவு வரை கங்குவா படம் ஹவுஸ்புல்லாக இருக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது. இதன்மூலம் படத்தின் வசூல் சற்று அதிகரிக்கும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால், படத்தின் பட்ஜெட் தொகையான ரூபாய் 350 கோடியை எட்டிப்பிடிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.
ரூ.1000 கோடி எட்டுமா?
ஆனால், அடுத்த வாரம் படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், அடுத்தடுத்த வாரங்களில் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. குறிப்பாக, படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய 1000 கோடி ரூபாய் வசூல் என்பது வாய்ப்பே இல்லை என்றே சினிமா நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.