விழுப்புரம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் ரயிலில் ஏற முயன்ற போது கால் இடறி தண்டவாளத்தில் விழுந்த 4 பேர், ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவத்தால் திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பயணிகள் அபாய சங்கிலியை இழுத்ததால் ரயில் நின்றது. இதன் மூலம் அவர்கள் சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ரயிலில் ஏற முயன்ற போது கால் இடறி தண்டவாளத்தில் விழுந்த 4 பேர்
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ( வயது 50) அவரது மகள் கோமதி, மருமகன் மணிகண்டன் 7 மாத கைக்குழந்தை கிருத்திகா மற்றும் உறவினர்கள் சங்கீதா காயத்ரி, ஆகிய ஐந்து பேரும் தெள்ளார் கிராமத்தில் இருந்து பேருந்து மூலமாக திண்டிவனத்திற்கு வந்து, திண்டிவனத்தில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு செல்வதற்காக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஏற முயன்றனர்.
அபாயசங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்
அப்பொழுது ஏழு மாத கைக்குழந்தை கிருத்திகா,கோமதி, சம்கார், மணிகண்டன் ஆகியோர் ரயிலில் ஏற முயன்ற போது திடீரென கால் வழக்கி ரயிலுக்கு அடியில் மாட்டிக் கொண்டனர். உடனடியாக ரயிலில் இருந்த பயணிகள் அபாயசங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதில் 7 மாத கைக்குழந்தை கிருத்திகா, மணிகண்டன், கோமதி, சங்கர், ஆகியோர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு
முன்னறிவிப்பு இன்றி ரயிலை இயக்கத் தொடங்கியதாக ஆத்திரமடைந்த பயணிகள், ரயிலை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
அபாயச் சங்கிலி ( emergency brake (train)
அபாயச் சங்கிலி ( emergency brake (train) என்பது ஆபத்துக்காலங்களில் பயணிகள் தொடருந்தை நிறுத்த உதவும் கருவியாகும்.
ரயிலை உடனடியாக நிறுத்தும் வேகத்தடைக்கு பெயர் நியூமாட்டிக் பிரேக் என்பதாகும். தொடருந்தில் கம்ரெசர் என்னும் காற்று சேகரிப்பானை வைத்திருப்பார்கள். இதில் காற்றை அழுத்தத்துடன் ஒரு முதன்மை உருளையில் சேகரித்து வைத்திருப்பார்கள். இதில் இருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் ஒரு குழாய் ஒவ்வொரு பெட்டிக்கும் காற்றழுத்தம் செல்லும். இக்குழாய் ஒவ்வொரு பெட்டியிலும் இணைக்கப்பட்டிருக்கும். இதேபோல ஒவ்வொரு பெட்டியிலும் தனித்தனியாகவும் காற்றழுத்த உருளைகள் இருக்கும். இந்த உருளைகளிலும் காற்று அழுத்தத்துடன் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இதிலும் முதன்மை உருளையிலும் காற்றழுத்தம் ஒரே அளவாக இருக்கும்.
இவை இரண்டு அழுத்தங்களும் ஒரே அளவாக இருக்கும்வரை வேகத்தடைக் கட்டைகள் சக்கரங்களின் மேல் படாமல் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுநர் வண்டியை உடனே நிறுத்த விரும்பினால் முதன்மை உருளையில் இருந்து வரும் காற்றை நிறுத்திவிடுவார். இதனால் ஒவ்வொரு பெட்டிகளிலும் இருக்கும் தனிப்பட்ட உருளைகளில் இருக்கும் காற்றழுத்தம் அதிகமாவதால் லிவர்கள் இயங்கி வேகத்தடை கட்டைகள் சக்கரங்களை அழுத்தி வண்டியை நிறுத்துகின்றன.
தொடர்வண்டி பெட்டிகளில் சிவப்பு நிறத்தில் உள்ள சங்கிலியைப் பிடித்து இழுக்கும்போது ஒரு வால்வு திறந்து ஒட்டுநர் செய்ததைப்போல ஒருபக்கம் காற்றழுத்தம் நின்றுபோய்விட வண்டிகளில் உள்ள உருளைகளின் காற்றழுத்தத்தால் வண்டிச் சக்கரங்களை வேகத்தடைக் கட்டைகள் அழுத்தி வண்டி நிற்கும். இந்தியாவில் சட்டவிரோதமாக சிலர் வண்டிகளை அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்துகின்றனர். இதனால் தேவையின்றி ஒருவர் வண்டியை நிறுத்தினால் இந்திய தொடர்வண்டி நிறுவனத்தால் ரூபாய் ஆயிரம் தண்டம் அல்லது ஓராண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.