வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்கு எதிராக கங்கனா ரனாவத் கருத்து கூறியிருந்த நிலையில் அவருக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. கொலை மிரட்டலை அடுத்து கங்கனா ரனாவத் பஞ்சாப் மாநிலக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘வேளாண் சட்டம் தொடர்பாக நான் கூறிய கருத்தை அடுத்து எனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. பதிண்டாவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனச் சட்டத்துக்குப் புறம்பாகவோ அல்லது எந்த சாதியினரையோ மதத்தையோ குறிப்பிட்டு நான் எதுவும் கருத்து கூறவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, நீங்களும் ஒரு பெண்தான் உங்களது மாமியார் இந்திரா காந்தியும் ஒரு பெண்தான். ஒரு பெண்ணாக நீங்கள் இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள உங்களது கட்சியின் அரசுக்கு உடனடியாக இதுகுறித்துத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். பஞ்சாப் மாநிலக் காவல்துறையிலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரணாவத், "உண்மையிலேயே 2014ஆம் ஆண்டுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. 1947ல் கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா?" என்று பேசினார். இந்தப் பேச்சை கண்டித்து கங்கானவை தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் கண்டனங்கள் வலுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.