தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை  கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தது. தன்பாலின உறவாளர்கள் திருமண தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் அரசிய்ல் சாசன அமர்வு விசாரிக்கும் சூழலில் தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை சர்ச்சைகளின் நாயகி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.


ஹரித்வார் சென்றுள்ள கங்கனாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர், தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும். திருமணம் என்பது இதயம் சார்ந்தது. இதயங்கள் சேர்ந்துவிட்டால் அதன்பின்னர் இணைவோரின் தேர்வு பற்றி வேறு என்ன விமர்சனம் வேண்டியுள்ளது. மேலும், பாலியல் உறவுத் தேர்வு என்பது உங்கள் படுக்கையோடு முடிய வேண்டியது. அதை உங்கள் அடையாளமாக முன்னிலைப்படுத்தி பதக்கம் போல் தூக்கிக் கொண்டு எல்லா இடத்திலும் காட்ட வேண்டியதில்லை. அதைவிட முக்கியம் உங்கள் பாலினத்தை விமர்சிப்பவர்களை எதிர்ப்பதையே வேலையாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் மீண்டும் சொல்கிறேன் உங்கள் பாலினம் உங்களின் அடையாளம் அல்ல. உங்கள் பாலினம் என்னவாக இருந்தாலும் அது பிரச்சனையே இல்லை. நவீன உலகில் நடிகை, பெண் இயக்குநர் என்றெல்லாம் யாரும் பேசுவதுகூட இல்லை. நீங்கள் செய்யும் செயல்தான் உங்கள் அடையாளம். நீங்கள் படுக்கையில் செய்யும் செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.






கங்கனாவின் கருத்துக்கு வரவேற்பு


கங்கனாவின் இந்த கருத்துக்கு LGBTQIA+ சமூகத்தினர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், இவர் மட்டும்தான் தன்பாலின உறவை வெளிப்படையாக அங்கீகரித்துள்ள ஒரே பாலிவுட் நடிகர். இவர் மீது எனக்கு பல்வேறு அதிருப்திகள் இருந்தாலும், கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரின் இந்தக் கருத்துக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


கங்கனா ரனாவத் அண்மையில் எமர்ஜென்சி திரைப்படத்தில் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்து முடித்துள்ளார். அதேபோல் தமிழில் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.