அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கடந்தாண்டு வெளியான மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் வெளிப்படையாகப் பேசி சர்ச்சையில் சிக்குவார் கங்கனா.
அடுத்ததாக எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து வரும் கங்கனா இப்படத்தை இயக்கியும் உள்ளார். மேலும் இந்த படத்தில் அனுபம் கெர் , சதீஷ் கவுசிக், ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா கொள்கையில் நம்பிக்கை கொண்ட கங்கனா அடிக்கடி நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை சமஸ்கிருதமாக இருக்கலாம் என கூறி அதிர வைத்தார்.
அவரின் நடவடிக்கைகள் கங்கனா அரசியலில் ஈடுபடுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் அதனை மறுத்து வந்தார். ஆனால் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், அரசியலில் நுழைவது மற்றும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஒரு கலைஞனாக எனக்கு இந்திய அரசியலில் ஆர்வம் உண்டு. எதிர்காலத்தில் அரசியலை மையமாக வைத்து திரைப்படங்களை தயாரிப்பேன். மேலும், நாட்டிற்கு நல்லது செய்பவர்களுக்கு சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அதற்கு எல்லா வகையிலும் நான் ஆதரவளிப்பேன் என கூறியுள்ளார்.
அதேசமயம் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தனக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இதன்மூலம் இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் அல்லது 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்கனா அரசியலில் களமிறங்குவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.