ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2022ஆம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் நினைவு அஞ்சலி செலுத்தும் பிரிவில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பெயர் விடுபட்டது குறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் லதா மங்கேஷ்கர் பாரத் ரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண் உட்பட ஏராளமான உயரிய விருதுகளைப் பெற்றவர். தனது 70 வருடங்களுக்கும் மேலான கலையுலக வாழ்க்கையில் 30,000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல் உறுப்புகள் செயலிழந்ததால் கடந்த ஜனவரி 6-ம் தேதி, தனது 92 வயதில் மறைந்தார். ஒரு சகாப்தத்தின் இசைப் பயணம் முடிந்தது.


இந்நிலையில் மார்ச் 27-ம் தேதி அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவின்போதும், தற்போது லாஸ் வேகாஸில் நடைபெற்ற 64-வது கிராமி விருதுகளிலும் லதா மங்கேஷ்கர் நினைவுகூரப்படாமல் விடுபட்டிருப்பது, இசை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.



இசைக் கலைஞர்களை கௌரவிக்கும்வகையில் ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் இந்த விழா லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர் ரஹ்மான் தன்னுடைய மகனுடன் கலந்து கொண்டார். இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ஆல்பம் இசைப் பாடகர்கள் உள்ளிட்டவர்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் 86 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. நினைவு அஞ்சலி செலுத்தும் பிரிவில் இந்த ஆண்டு உலகை விட்டு பிரிந்து சென்ற இசைக் கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். ஆனால், அதில் இந்தியாவின் குரலாக விளங்கிய லதா மங்கேஷ்கரை நினைவுகூராததால் பலரும், ஹாலிவுட்டின் மிகப்பெரிய இசை விருதுகள் விழாவை நடத்தும் நிறுவனமான 'ரெக்கார்டிங் அகாடமி'யை விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து பதிவிட்ட கங்கனா ரணாவத், "சர்வதேச விருதுகள் என்று கூறிக்கொண்டு, பழம்பெரும் கலைஞர்களை அவர்களின் இனம் அல்லது சித்தாந்தங்கள் காரணமாக புறக்கணித்து, வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கும் இதுபோன்ற விருது விழாக்களுக்கு எதிராக நாம் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். உலகளாவிய விருதுகள் என்று கூறிக்கொள்ளும் இந்த பக்கச்சார்பான நிகழ்வுகளை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்," என்று கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதியுள்ளார். 



பன்முகத் தன்மையோடு இசை விருதுகள் வழங்கும் விழா எனக் குறிப்பிடப்படும் கிராமி விருதுகள், அமெரிக்க இசையை மட்டும் கெளரவிப்பதாகவும், பன்முகத்தன்மை என்ற வார்த்தையிலிருந்து தவறிவிட்டதாகவும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 15-ம் தேதி, இந்தியாவின் மூத்த இசையமைப்பாளரான பப்பி லஹிரி (Bappi Lahiri) தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலால் (obstructive sleep apnea) இறந்தார். அவரையும் கிராமி விருதுகள் நிகழ்ச்சி நிறைவுகூராமல் ஒதுக்கிவிட்டது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இர்பான் கான், பானு ஆதயா, சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ரிஷி கபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் இசையுலகில் நீண்ட காலங்கள் சிறப்பாக பணியாற்றிய லதா மங்கேஷ்கர் மற்றும் பப்பி லஹரி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.