இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான ’தலைவி’ திரைப்படம் விரைவில் இந்திய அளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓ.டி.டி., தளங்களான நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் பெரிய அளவில் வெளியாகும் என ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நெட்பிளிக்ஸில் இந்தியிலும், அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். தொடக்கத்தில் தலைவி எனத் தமிழிலும் ஜெயா என தெலுங்கு மற்றும் இந்தியிலும் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் பின்னர் மூன்று மொழிகளிலும் ‘தலைவி’ என்றே மாற்றப்பட்டது. மேலும் டிசம்பர் 2020ல் திரைப்படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் ஏப்ரல் 2021ல் திரைப்படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. பின்னர் தேதி அறிவிக்கப்படாமல் வெளியாகும் தேதி தள்ளிப்போடப்பட்டது. இதையடுத்துதான் தற்போது படம் திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்கிற அறிவிப்பை நேற்றுதான் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கங்கனா ரணாவத் தொடர்ச்சியாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்ட சர்ச்சை கருத்தால் அவரது ட்விட்டர் கணக்கே முடக்கப்பட்டது. அண்மையில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானதை அடுத்து அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த கங்கனா ஏடாகூடமாக கருத்துக் கூறியிருந்தால் அந்தப் பதிவையே நீக்கியது இன்ஸ்டாகிராம். தனது பதிவு நீக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமையே கலாய்த்தார் கங்கனா. அனைத்து சமூக ஊடகங்களோடும் ‘டிஷ்யூம்’ மோட்டில் இருந்துவருகிறார் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.