சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட அதிக அளவிலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


 



இந்நிலையில் கங்கனா ரனாவத் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு திரும்பி செல்லும் போது சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலாளி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் சிஐஎஸ்எஃப் பெண் காவலாளி கங்கனாவை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்தேறியது. அந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலாளியின் பெயர் குல்விந்தர் கவுர். 


கங்கானாவை கன்னத்தில் அறைந்ததற்கான காரணத்தை அந்த காவலாளி தெரிவிக்கையில் 100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களில் பெண்கள் கலந்து கொள்கிறார்கள் என கங்கனா தெரிவித்துள்ளார். அது போல அவரால் அந்த போராட்டங்களில் கலந்து கொண்டு உட்கார முடியுமா? என கங்கனா விவசாயிகள் குறித்து தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் கங்கனாவை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 


 




சிஐஎஸ்எஃப் பெண் காவலாளிக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் கங்கனா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நீளமான குறிப்பு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். "ஒவ்வொரு கொலைகாரர், திருடர், பாலியல் வன்முறை செய்பவர்கள், என அனைவருக்குமே ஒரு குற்றத்தை செய்ய உடல், உணர்ச்சி, உளவியல் ரீதியிலான வலுவான காரணம் இருக்கும்.  எந்த குற்றமும் காரணமின்றி நடக்காது. ஆனாலும் அவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள். குற்றவாளிகளுக்கு நீங்கள் ஆதரவாக இருந்தால் நாட்டின் அனைத்து சட்டங்களையும் மீறி ஒரு குற்றத்தை செய்வதற்கான உந்துதலாக அமைந்து விடும். 


 







ஒருவரின் அந்தரங்க பகுதிக்குள் நுழைந்து அவர்களின் அனுமதியின்றி அவர்களை தொட்டு தாக்குவது உங்களுக்கு சரியாக இருந்தால் நீங்கள் கற்பழிப்பு அல்லது கொலை செய்தாலும் பரவாயில்லை என்பீர்களா? உங்களின் உளவியல் குற்றங்களுக்கு தயவு செய்து யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்ளுங்கள். இல்லையெனில் அது உங்கள் வாழ்க்கையில் கசப்பான மற்றும் சுமையான அனுபவமாக மாறும். இவ்வளவு பொறுப்பு, வெறுப்பு மற்றும் பொறாமையை சுமக்காதீர்கள். தயவு செய்து உங்களை அதில் இருந்து விடுவித்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.