பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூரை தமிழில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


விக்ரம் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், பொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். நடிப்பு மட்டுமின்றி, திரைப்படங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வரும் கமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக சிம்பு, சிவக்கார்த்திகேயன் உள்ளிட்டோரை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். 


ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கும் நெல்சனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கவும் கமல் திட்டமிட்டுள்ளார். இதில் தனுஷ் நடிப்பார் என கூறப்படுகிறது. 


இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தையும் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதில், ‘லவ் டுடே’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும், நயன்தாரா முக்கிய  காதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப்க்கு ஜோடியாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவின் மகள் ஜான்விகபூரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தலாம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.


இதற்காக கமல் தரப்பில் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த ஸ்ரீதேவியுடன் கமல் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு, அவரின் குடும்பத்துடன் நட்புடன் இருந்து வரும் கமல்ஹாசன், தனது தயாரிப்பில் ஸ்ரீதேவியின் மகளை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.


கமலுக்கு சொந்தமான ராஜ் கமல் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ராஜபார்வை தான் கமல்ஹாசன் தயாரித்த முதல் படம். அதை தொடர்ந்து தமிழ் தெலுங்கு, என பல்வேறு படங்களை தயாரித்த ராஜ்கமல் இண்டர்நேஷனல், விக்ரம் படத்தை தயாரித்து பிரமாண்ட வெற்றியை பெற்றது. இதனால், நடிப்பு மட்டும் இன்றி, மீண்டும் தயாரிப்பிலும் கமலின் கவனம் திரும்பியுள்ளது.