அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த ஜூன் 23ம் தேதி மாநிலம் பாட்னாவில் தங்களது முதல் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து வருகின்ற ஜூலை 13, 14ம் தேதிகளில் இரண்டாம் கட்ட கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி, காவிரி தண்ணீர் குறித்து கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போதிய அளவில் தென்மேற்கு பருவமழை இல்லாததால் இந்தாண்டு தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என்றார். இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் பூதகரமாக வெடிக்கவே திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார், “ காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு இரட்டை வேடம் போடுகிறது.” என தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அதே நேரத்தில், தமிழ்நாட்டிற்கு காவிரி கொண்டுவராமல் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூருக்கு செல்லக்கூடாது. அவ்வாறு சென்று சென்னை திரும்பினால் ”கோ பேக் ஸ்டாலின்” என போராட்டம் நடத்துவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தசூழலில், காங்கிரஸ் தலைவர்களை திமுக தொடர்பு கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 13, 14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வந்த சில மணிநேரங்களிலேயே காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், வருகின்ற ஜூலை 17, 18ம் தேதிகளில் பெங்களூரில் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
இந்தநிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட கடிதத்தில், “2023 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் ஒரே எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முதல் சந்திப்பை நாங்கள் நடத்தினோம், இதை பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் ஸ்ரீ நிதீஷ் குமார் அவர்கள் அன்புடன் நடத்தினார். நமது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலான பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்து, அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாகப் போராடுவது குறித்து ஒருமனதாக உடன்படிக்கைக்கு வந்ததால் இந்த சந்திப்பு பெரும் வெற்றி பெற்றது. மீண்டும் ஜூலை மாதம் நாம் அனைவரும் சந்திப்பதற்காக ஒப்புக்கொண்டோம். மீண்டும் விட்ட விவாதங்களைத் தொடர்வதும், நாங்கள் உருவாக்கிய வேகத்தை உருவாக்குவதும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக, 17 ஜூலை 2023 அன்று மாலை 6.00 மணிக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் 18 ஜூலை 2023 அன்று காலை 11.00 மணி முதல் தொடரும்.
உங்களை பெங்களூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
மல்லிகார்ஜூன கார்கே
என குறிப்பிடப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக கட்சியே காவிரி பிரச்சனையால் பெங்களூருவில் ஜூலை 17ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்வி உள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியாக விடுதலை சிறுத்தைகள் நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.