சொத்தை அபகரிப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் மீது லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகை நயன்தாராவை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உரிய ஆவணங்களை சமர்பித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் இந்த நட்சத்திர தம்பதியினர்.
இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் சில படங்களை தயாரித்தும் உள்ளனர். அஜித்தை வைத்து தனது அடுத்தப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் கழட்டி விடப்பட்டார். இப்படியான சூழலில் விக்னேஷ் சிவன் தந்தை சிவகொழுந்து மீது லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள்ளது.
விக்னேஷ் சிவனின் உறவினர்களான லால்குடியில் வசித்து வரும் பெரியப்பா மாணிக்கம் மற்றும் கோவையைச் சேர்ந்த குஞ்சிதபாதம் என்பவரது மனைவி சரோஜா என்பவரும் இந்த புகாரை அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், சிவகொழுந்து தங்களுக்கே தெரியாமல் சொத்துகளை அபகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த புகார் மனுவில் விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. விக்னேஷ் சிவன் தந்தை ஏற்கனவே மறைந்து விட்டதால் சொத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தயார் மீனா குமாரி, ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தீர்க்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்திற்கு உறவினர்களை அழைக்கவில்லை என பெரியப்பா மாணிக்கம் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.