இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்வுகளில் ஒன்றான குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சினிமா என்னும் கலையை சரியாக நாம கையாளணும். அப்படி கையாள தவறும்போது தான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்த ராஜராஜ சோழன் பற்றிய கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. 


வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளம் மூலம் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மணிரத்னம் இயக்கியுள்ள  பொன்னியின் செல்வன் படத்தை சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் பார்த்தார். அவருடன் நடிகர்கள் விக்ரம், கார்த்தி இருவரும் இணைந்து படம் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.






மேலும் படத்தை பார்த்த மகிழ்ச்சியில் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது போன்றது உணர்வு எனக்குள் ஏற்பட்டுள்ளது என கமல் கூறினார்.அப்போது அவரிடம் ராஜராஜசோழனை இந்து மதம் சார்ந்தவரா சித்தரிக்கிறதா இயக்குநர் வெற்றிமாறன் சொன்னாரு அதுபற்றி உங்க கருத்து என்ன என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு கமல், ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது என்றும், வைணவம், சைவம், சமணம் என இருந்தது என கமல் தெரிவித்தார். 


எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்த நிலையில், எட்டாம் நூற்றாண்டில் அதையெல்லாம் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வந்தார். இதெல்லாம் சரித்திரம். ஆனால் இங்க அதெல்லாம் தேவையில்லை. இது சரித்திர புனைவு பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் நேரம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இயக்குநர் வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.