எம்.ஜி.ஆர்
கடந்த 1987ஆம் ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்த எம்.ஜி ஆரின் 36ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 10 ஆண்டுகள் பதவி வகித்த எம்.ஜி ஆர். அரசியல் தலைவராகவும் நடிகராகவும் என்றும் மக்களால் நினைவு கூரப்பட்டு வருகிறார். ன் இன்று அவரது நினைவு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
மரணத்தால் வெல்ல முடியாதவர்
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் எம்ஜிஆரை நினைவு கூறும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் ”மரணத்தால் வெல்ல முடியாத மகத்தான மனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அனைவரது நினைவுகளிலும் இன்றும் வாழும் பெருந்தகையாளரான அவரது நினைவு நாளில், கலைத்துறையிலும் அரசியலிலும் அவர் செய்த சாதனைகளை நினைவு கூர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரியார்
அதேபோல் இன்று திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் நினைவுநாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது. மூடநம்பிக்கை, சாதிக்கு எதிராக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கொடுத்தவர் தந்தை பெரியார் என்று மக்களால் அழைக்கப்படும் ஈ.வெ ராமசாமி. பெண்ணடிமைக்கு எதிராக பெரியாரின் கருத்துக்கள் இன்று வெகுஜன பரப்பில் அதிக எதிரொலிகளை எழுப்பக் கூடியவையாக இருக்கின்றன.
எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன் தந்தை பெரியாரையும் நினைவு கூர்ந்துள்ளார். இந்தப் பதிவில் “பேதம் பார்ப்போருக்கும் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிழைப்போர்க்கும், ஆணென பெண்ணென ஆதிக்கம் செலுத்துவோருக்கும் இன்றைக்கும் சிங்கக் கனவாக இருக்கும் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவர்தம் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம். அவரது வீச்சு குறையாமல் இருக்க நம்மாலான பங்கை நல்குவோம்.” என்று அவர் கூறியிருக்கிறார்.