மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை..


வானம் உள்ளவரை வையம் உள்ளவரை யார் இங்கு மறப்பார் பெரியாரை..


- காசி ஆனந்தன்.


பெரியார் ஏன் இன்றும் போற்றப்படுகிறார் என்பதற்கு பெரியார்தான் சாட்சி. அவர் மறைந்து இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ல் பிறந்தவர் ராமசாமி நாயக்கர். சமூக சீர்திருத்த, சுயமரியாதைக் கொள்கைகளுடன் வளர்ந்த அவர் 1929ல் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் எனும் சாதிப் பெயரைத் துறந்தார்.


காசிக்கு சென்று திரும்பினால் எதையாவது துறக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் அந்த நம்பிக்கைக்காக அல்ல தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் பெரியார் காசிக்கு சென்று திரும்பிய பின்னர் கடவுள் நம்பிக்கையையே துறந்தார். வாரணாசி சத்திரங்களில் பிராமணர் அல்லாதோருக்கு உணவு மறுக்கப்பட்டதால் அவர் கடவுள் மறுப்பாளரானார். அப்படிப்பட்ட கடவுள் மறுப்பாளரை இன்றும் சாதி, மதம் கடந்து பலரும் கொண்டாடுகின்றனர்.


 ஆட்டோவில் சாமிப்படங்களும், வீட்டில் பூஜைகளும் செய்பவர் கூட பெரியார் சிலைக்கு இன்று மரியாதை செலுத்துகிறார். நெற்றியில் இருக்கும் பட்டையோ, கழுத்தில் இருக்கும் சிலுவையோ கடவுள் மறுப்பாளர் பெரியாரை வெறுக்கவில்லை. காரணம் அவரது சுயமரியாதை, சமூக நீதிக் கொள்கைகள். பெரியார் ஒரு காங்கிரஸ் காரியதரிசியாகத் தான் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 


திருநெல்வேலியில் விவிஎஸ் ஐயர் நடத்திய குருகுலத்தில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதோருக்கு தனித்தனியாக உணவுவிடுதி நடத்தப்படுவது தொடர்பாக காந்தியுடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். இதில் காங்கிரஸை சமாதானப்படுத்த முடியாததால் பெரியார் காங்கிரஸில் இருந்து விலகினார்.


1925ல், அவர் தன்னை நீதிக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அந்த இயக்கம் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தது.கேரளாவின் வைக்கம் கோயிலுக்கு எதிரான பாதையை பொதுப் பாதையாக அறிவிக்கக்கோரிய போராட்டத்தில் கைதாகி சிறை சென்றார். அதில் வெற்றி பெற்றதால் வைக்கம் வீரர் என்றழைக்கப்பட்டார். தேசிய அடையாளம் வேண்டாம் தமிழ் அடையாளம் தான் வேண்டும் என்ற கொள்கையின்பால் நடந்தார். இந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். 


தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழி பேசுபவர்களை உள்ளடக்கிய சுதந்திர திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்வைத்தார். இப்படி தன் வாழ்நாள் பல்வேறு சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுத்த பெரியார் இன்று தமிழ் மக்களுக்கு ஒரு கருத்தியலாக இருக்கிறார். பெரியார் என்ற மாமனிதர் மக்களின் மனங்களில் ஒரு கொள்கையாக வாழ்கிறார். அவர் விதைத்த சமூக நீதி, சுய மரியாதை, மொழிப் பெருமை ஆகியன தான் இன்றும் அவரை இளைஞர்களின் கதாநாயகராக வைத்திருக்கிறது. பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க அவர் முன்னெடுத்த போராட்டங்கள் ஏராளம். பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரியாரின் கருத்துகள் சமூக புரட்சியை உண்டாக்கக் கூடியவை. 


இப்படிப்பட்ட பெரியார் 1973 ஆம் ஆண்டு தன்னுடைய 94 வயதில் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் போட்ட கருத்து விதைகள் இன்று மரமாக ஆழமாக சமுதாயத்தில் வேரூன்றி சமூக நீதியை காத்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.  மறைந்தாலும் உலகம் இயங்கும் வரை பெரியார் தன் கருத்துகள் மூலமாக மக்களிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.