கமல்ஹாசன்


உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். கூடுதலாக பிக்பாஸ் தமிழ்  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


KH233


கமல் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் KH233. சதுரங்க வேட்டை , தீரன், நேர்கோண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.  சமூகக் கருத்தை அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக இந்தப் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமீபத்தில் வெளியானது.


KH234


இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் KH234 படத்தில் இணைய இருக்கிறார் கமல்ஹாசன். மணிரத்னம் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் அன்பறிவு சண்டைக் காட்சிகளை வடிவமைக்கவும் செய்கின்றனர். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இணையதளத்தில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் பிறந்தநாளன்று படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருக்கிறது.






இந்நிலையில், மும்பையில் தொடங்கி நடைபெற்று வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நேற்று கலந்துகொண்டனர். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த இருவரும் KH234 குறித்து பேசினார்கள். அப்போது பேசிய கமல்ஹாசன் “இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது. மணிரத்னம் இந்தப் படத்தை இயக்குகிறார். நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இதைத் தவிர என்னை என்ன வேலை செய்ய சொன்னாலும் நான் அதை செய்வேன்” என்று கூறினார்.


இதற்கு மணிரத்னம் “ இதை நான் நியாபகம் வைத்துக் கொள்கிறேன் “ என்று நகைச்சுவையாக பதிலைத்தார். மேலும், ரசிகர்களைப் போல் தாங்களும் இந்தப் படத்தை பார்ப்பதற்காக ஆர்வமாக இருப்பதாக கமல்ஹாசன் கூறினார்.


இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் , காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.