உலகக் கோப்பையில் இன்று பலமிக்க ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகிறது. தரம்ஷாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. 


ஆனால், நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் எடுத்த முடிவு தவறு என்று சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் நிரூபித்தனர்.  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரும், காயத்தில் இருந்து திரும்பிய டிராவிஸ் ஹெட்டும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நினைத்துப் பார்க்காத தொடக்கத்தை அதிரடியாக கொடுத்தனர். 


ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன்கள் இணைந்து முதல் பத்து ஓவர்களில் 118 ரன்கள் குவித்து  அசத்தினர். இந்த தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.1 ஓவர்களில் 175 ரன்கள் குவித்திருந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 65 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்து அவுட்டானார். மறுமுனையில் 25 பந்துகளில் அரைசதம் கடந்த ஹெட், 59 பந்துகளில் சதம் அடித்து மிரட்டி, 109 ரன்களில் அவுட்டானார். 






தொடர்ந்து, மிட்செல் மார்ஷ் 36 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்தாக உள்ளே வந்த லாபுசாக்னே 18 ரன்களில் நடையைக்கட்டினார். 


வழக்கம்போல் களமிறங்கிய அதிரடி காட்ட தொடங்கிய மேக்ஸ்வேல், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்ய தொடங்கினார். கிடைக்கும் பந்துகளை எல்லாம் பறக்கவிட்ட மேக்ஸ்வேல், 24 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து 41 ரன்களின் அவுட்டானார். 46 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா 344 ரன்கள் குவித்திருந்தது. 


அடுத்ததாக களமிறங்கிய கம்மின்ஸ் மற்றும் இங்கிலிஸ் அதிரடி பேட்டிங்கை கையில் எடுத்தனர். இருவரும் இணைந்து அவ்வபோது தேவையாக நேரத்தில் பவுண்டரிகளை விரட்ட, 47 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்களை தொட்டது. தொடர்ச்சியாக 48வது ஓவரில் கம்மின்ஸ் மற்றும் இங்கிலிஸ் சிக்ஸர்களை மாறி மாறி பறக்கவிட, 27 ரன்கள் மட்டும் அந்த ஓவரில் வந்தது. போல்ட் வீசிய 48.1 ஓவரில் இங்கிலிஸ் 4 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 38 ரன்களில் அவுட்டாக, அடுத்த 2வது பந்தில் கம்மின்ஸும் 37 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். மேலும், அதே ஓவரின் கடைசி பந்தில் ஜாம்பா க்ளீன் போல்டாக, கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்டார்க் கேட்ச் கொடுத்தார். 49.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. 


நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்களும், பிலிப்ஸ் 3 விக்கெட்களும் எடுத்தனர்