ஒருபக்கம் கமல் நாயகனாக நடித்துள்ள இந்தியன் 2  மறுபக்கம் கமல் வில்லனாக நடித்துவரும் கல்கி 2898 என இரு படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக இருக்கின்றன.


ஜூன் மாத வெளியீடுகள்


2024 ஆம் ஆண்டில் 4 மாதங்கள் கடந்துள்ளன. இந்த நான்கு மாதங்களில் இதுவரை பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் திரையரங்கில் வெளியாகவில்லை. அடுத்து வர இருக்கக் கூடிய மாதங்கள் மிகப்பெரிய  பொருட்செலவில் உருவாகி இருக்கும் ஸ்டார்களின் படங்கள் ரீலீஸுக்கு காத்திருக்கின்றன. விக்ரம் நடித்துள்ள தங்கலான் , கமல் நடித்துள்ள இந்தியன் 2  ஆகிய படங்கள் விரைவில் திரையரங்கில் வெளியாக ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார்கள்.


இந்தியன் 2 Vs கல்கி 2898


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2. சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் , பிரியா பவாணி சங்கர், பாபி சிம்ஹா , எஸ்.ஜே .சூர்யா மற்றும் மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து , மனோபாலா, மயில்சாமி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. 


இந்தியன் 2 வெளியாகும் அதே ஜூன் மாதத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படமும் வெளியாக இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898 படத்தில் அமிதாப் பச்சன் , ரானா டகுபதி மற்றும் தீபிகா படூகோன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் ரூ 600 கோடி செலவில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது கல்கி 2898 படம் . இப்படத்தின் இந்தி மொழி வெளியீட்டு உரிமம் மட்டுமே 100 கோடிக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் வரும் ஜூன் மாதம் 14 அல்லது 17 ஆம் தேதி வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது. 


ஒரே மாதத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப் பட வாய்ப்புள்ளது என்பதால் இதற்கு இரண்டு படக்குழுவினரும் சமரசமான முடிவு ஒன்றுக்கு வந்துள்ளார்கள். அதாவது இரண்டு படங்கள் வெளியாகும் தேதிகளுக்கு இடையில் இரண்டு வார கால இடைவெளி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது . இதில் விமர்சன ரீதியாக வெற்றிபெறும் படமே வசூலில் முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்