வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 


கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதியே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகியுள்ளது. இதுவரை நிலச்சரிவினால் அங்கு 316 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை. மீட்புப்பணிகளில் மீட்பு படையினர் 4வது நாளாக ஈடுபட்டுள்ளனர். முண்டக்கை பகுதியில் தெர்மல் ஸ்கேனரை கொண்டு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.  


கேரளா பகுதியே சின்னாப்பின்னமாகியுள்ளதால் நிதியுதவி அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி கேரளாவுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டது. அதேபோல், அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 


பிரபலங்கள் வரிசையில் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, ஜோதிகா, கார்த்தி சார்பில் ரூ. 50 லட்சமும் கேரளாவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். 


இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கேரளா பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் அளித்துள்ளார். 






முன்னதாக, கமல்ஹாசன் வயநாடு நிலச்சரிவு செய்தியை கேட்டு தனது எக்ஸ் தளத்தில் “கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும்  நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். 


பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். 


ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.