தக் லைஃப்
நாயகன் படத்தைத் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைஃப் . சிம்பு , த்ரிஷா , ஐஸ்வர்யா லக்ஷ்மி , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் , அபிராமி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்லார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜூன் 5 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்று தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது
தக் லைஃப் முதல் பாடல் 'ஜிங்குச்சா'
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. சென்னை , புதுச்சேரி , காஞ்சிபுரம் , செர்பியா , மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. முன்னதாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் படத்தில் நடிக்க இருந்து படத்தில் இருந்து விலகினர். பின் சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் இப்படத்தில் இணைந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு அறிவித்தது. இன்று சென்னையில் தக் லைஃப் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் த்ரிஷா , கமல் , சிம்பு , மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.