Chennai Airport MTC Bus: சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை அடைய,  தற்போது  ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியுள்ளது.

விமான நிலையத்தில் எம்டிசி பேருந்து:

எம்டிசி எனப்படும் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் விரைவில், சென்னை சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே சென்று, பயணிகளை ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், விமான நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிகிறது. தற்போதைய நிலையின்படி மக்கள், விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை பெற, உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. அதிலும் கோடை வெயில், கொட்டும் மழைக்காலத்தில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கான தீர்வு விரைவில் எம்டிசி பேருந்துகள் மூலம் கிடைக்க உள்ளது.

நீண்டகால கோரிக்கைக்கு பலன்:

பொதுமக்கள், ஆட்சியாளர்கள் மற்றும் திட்ட வல்லுநர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும், விமான நிலைய வளாகம் வரை எம்டிசி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக, எம்டிசி நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ”முடிந்தவரை விமான நிலையத்திற்கு அருகில் பயணிகளை கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்களை மேற்கொள்வதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதகாவும்” விளக்கமளித்துள்ளார்.

அனுமதிக்காக காத்திருப்பு:

விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்த உடனே, விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் மற்றும் தாம்பரம் அருகே கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் எம்டிசி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. தற்போது அந்த வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய சிற்றுந்துகளை மட்டுமே அரசு இயக்கி வருகிறது. குன்றத்தூர் வரையில் S69 மற்றும் தாம்பரம் கிழக்கு வரை S100 எனும் சிற்றுந்துகளை இயக்குகிறது. இந்த இரண்டு பேருந்துகளும் சேர்த்து, ஒரு ட்ரிப்பிற்கு 80 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்துகளில் பயணிக்கவும், அல்லது கூடுதல் கட்டணம் கொடுத்து கார் அல்லது ஆட்டோவில் பயணிக்க வேண்டியும் உள்ளது.

அதிகப்படியான கார், ஆட்டோ கட்டணம்:

விமான நிலைய வளாகம் வரை எம்டிசி பேருந்து சேவையை நீட்டிக்க அனுமதி வழங்க, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சுதா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். போதுமான இணைப்பு போக்குவரத்து வசதிகள் இல்லாததால், ஆட்டோ மற்றும் டாக்ஸிகளுக்கு அதிக வாடகை கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திற்குள் எப்படி பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்றனவோ, அதேபோல் விமான நிலைய வளாகத்திற்குள்ளும் மாநகர பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்” என சுதா கோரிக்கை விடுத்தார்.

விமான நிலைய நிர்வாகம் சொல்வது என்ன?

முறையாக அணுகினால் விமான நிலைய வளாகத்திற்குள் எம்டிசி பேருந்துகளை அனுமதிக்க, தாங்கள் தயாராக இருப்பதாக இந்திய விமான நிலைய நிர்வாகம் தரப்பு விளக்குகிறது. அதேநேரம், பேருந்துகளை திருப்புவதற்கு, பார்க் செய்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான இடவசதி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதியை பெற்று தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி, விரைவில் எம்டிசி பேருந்துகளை விமான நிலைய வளாகம் வரை இயக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. அது கூடிய விரைவில் சாத்தியமாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.