உலக நாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசனை முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். என்னதான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் , அதன் பிறகு உதவி இயக்குநர் , இரண்டாம் நிலை கதாநாயகன் என்றே நடித்து வந்தார். முதன் முதலாக அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கமல்ஹாசன். அந்த படத்தை இயக்கியவர் பாலச்சந்தர். அந்த காம்போவிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் இந்த கூட்டணியில் வெளியானது. தனது சினிமா கரியரில் பாலச்சந்தரைத்தான் குருவாகவும் , வாத்தியாராகவும் , ஆசானாகவும் குறிப்பிடுவார் கமல்ஹாசன். அந்த அளவிற்கு பன்முக வித்தைக்காரர் பாலச்சந்தரிடம் பல வித்தைகளை கற்றுக்கொண்டார் கமல்ஹாசன்.
ஒரு முறை கிரேஸி மோகன் நாடக மேடை சிறப்பு விழா ஒன்றில் , கமல்ஹாசன் பாலச்சந்தருடனான அனுபவம் ஒன்றை பகிர்ந்துக்கொண்டார். கமல்ஹாசன் , ஆலம் நடிப்பில் கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மத லீலை. இந்த படத்தை இயக்கியவர் பாலச்சந்தர்தான். பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் கணவன் , அதனை அறிந்ததும் தாங்கிக்கொள்ள முடியாதவளாக அம்மா வீட்டிற்கு செல்லும் மனைவி. அங்கு சென்றது தனது அப்பாவிற்கு வீட்டு வேலைக்காரிக்கும் இருக்கும் தகாத உறவை அறிந்துக்கொள்கிறாள் நாயகி. இதனை ஏற்கனவே தெரிந்தவர் போல் காட்டிக்கொள்கிறார் அம்மா. உடனே தன் கணவன் வீட்டிற்கே மீண்டும் சென்றுவிட , அங்கு மனைவியின் பிரிவை உணர்ந்த கணவன் , திருந்தி அவளோடு அன்பாக வாழ துவங்குகிறான். இது மன்மத லீலை படத்தின் கதை .
இந்த படத்தை நடிகர் நாகேஷை மனதில் வைத்து எழுதியிருப்பார் போலும் பாலச்சந்தர். அந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த சமயத்தில் , ஏதோ ஒரு காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பிறகு பரப்பாக இங்கும் அங்கும் ஓட வேண்டிய சீனாம் ..அதில் கமல்ஹாசன் தனது திறமையை வெளிப்படுத்த , “ம்ம்ம்ஹூம் ..நல்லா வரல...நாகேஷை மனசுல வச்சு எழுதிட்டேன்” என சலித்துக்கொண்டாராம் பாலச்சந்தர். அப்போதெல்லாம் நாகேஷை தலையணை வைத்து அழுத்தி கொன்றுவிட்டால் என்ன? என தோன்றியிருக்கிறதாம் கமல்ஹாசனுக்கு. அதன் பிறகு நடந்ததை நாகேஷிடம் சொன்னாராம் கமல்ஹாசன் . அதற்கு நாகேஷ் பொருமையாக இரு எல்லாம் மாறும் என்றாராம்... அந்த காலம் மாறியது..ஆனால் அதற்கு கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆனது என்கிறார் கமல்ஹாசன்.