உணவு டெலிவரி, மளிகை டெலிவரி ஆகியவற்றைப் பிரதானமாக மேற்கொள்ளும் ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி சமீபத்தில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகப் பெற்றிருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


பெங்களூருவைச் சேர்ந்த ஸ்விக்கி நிறுவனம் தற்போதைய பங்கு விற்பனையில் அதன் மதிப்பை இரண்டு மடங்குகளாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சந்தையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில், ஸ்விக்கி நிறுவனப் பங்குகளின் விலை மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. 


கடந்த 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தின் போது ஸ்விக்கி நிறுவனம் சாஃப்ட்பேங்க், ஏக்ஸெல், ப்ரோசஸ் முதலான முதலீட்டு நிறுவனங்களிடம் சுமார் 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியைப் பெற்றது. இந்நிலையில் தற்போது புதிய நிதியும் ஸ்விக்கி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 



`40 மாதங்களில் எங்கள் உணவு டெலிவரி வர்த்தகம் பெற்ற மொத்த மதிப்பை, இன்ஸ்டாமார்ட் செயலி வெறும் 17 மாதங்களில் பெற்று, ஸ்விக்கி நிறுவனத்தின் பயன்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவை வழங்க இதுபோன்ற வகைகளை இரட்டிப்பாக்கும் எண்ணம் உள்ளது’ என ஸ்விக்கி நிறுவனத்தின் மூத்த நிர்வாகியும், நிறுவனருமான ஸ்ரீஹர்ஷா மேஜெட்டி தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஸ்விக்கி நிறுவனத்தின் அதிவேக டெலிவரி வர்த்தகமான இன்ஸ்டாமார்ட் சேவையைப் பெருக்க சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலரை அதில் முதலீடு செய்வதாக ஸ்ரீஹர்ஷா மேஜெட்டி கூறியிருந்தார். 


இந்த முதலீட்டு சுற்றில் புதிய முதலீட்டாளர்களான பேரோன் கேப்பிட்டல் க்ரூப், சுமேரூ வென்ச்சர், IIFL AMC லேட் ஸ்டேஜ் டெக் ஃபண்ட், கோடக், ஏக்ஸிஸ் க்ரோத் அவென்யூஸ், சிக்ஸ்டீந்த் ஸ்ட்ரீட் கேப்பிட்டல், கிஸால்லோ, ஸ்மைல் க்ரூப், செகாண்டி கேப்பிட்டல் முதலான நிறுவனங்கள் பங்குபெற்றுள்ளன. 



இந்தப் புதிய முதலீடுகளின் மூலம் ஸ்விக்கி நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் ஒட்டுமொத்தமாக அடுத்த மூன்று காலாண்டுகளில் அதன் மதிப்பை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக ஈட்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 


கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இன்ஸ்டாமார்ட் செயலியில் வாரம் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன; மேலும் இந்தியாவில் 18 நகரங்களில் இன்ஸ்டாமார்ட் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த செயலியின் பிக்கப், ட்ராப் வசதிகள் இந்தியாவின் 68 நகரங்களில் இயங்கி வருகின்றன. 


ஸ்விக்கியின் புதிய இன்ஸ்டாமார்ட் செயலிக்கு ஜொமோட்டோ நிறுவனத்தின் ப்ளிங்க் இட், மற்றொரு புதிய போட்டியாளராக ஸெப்டோ ஆகியவையும், பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் ஓலா நிறுவனத்தின் மளிகை டெலிவரி சேவை முதலானவை பெரும் போட்டியாக அமைந்துள்ளன.