களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி , சினிமாவோடு ஒன்றி வளர்ந்தவர் நடிகர் கமல்ஹாசன் . நடிப்பு மட்டுமல்லாமால்  நடனம் , இயக்கம் , தயாரிப்பு என சினிமாவின் அனைத்து துறைகளையும் கற்றுத்தேர்ந்தவர். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் சரி , இயக்குநர்களாக இருந்தாலும் சரி  கமல்ஹாசனிடம் அறிவுரை கேட்பதை வழக்கமாகத்தான் வைத்திருந்தார்கள் , வைத்திருக்கிறார்கள்.  சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.




அந்த நேர்காணலில் கமல் "விருதுகள் நம்மை நோக்கி வந்துவிட்டன அதனால் நாம் வென்றுவிட்டோம் என்ற மெத்தனமான நிலைக்கும் நான் ஆளாகிவிடக்கூடாது. அந்த பயமும் இருக்கு எனக்கு. பொதுவாக கருத்து வேறுபாடும் , சித்தாந்த வேறுபாடும் இருந்தால் என்னால் அந்த படத்தை பண்ண முடியாது. இந்தியன் படத்தின் கதாபாத்திரத்தோடு ஒன்ற  கருத்து ஒற்றுமையும் ஒரு காரணம்.  இதற்கு முன்னதாக கருத்து வேறுபாடு கொண்ட படங்களில் நடிக்க  மறுத்துள்ளேன். உதாரணத்துக்கு சொல்லனும்னா சங்கர்  அவர்கள் எடுத்த ஜென்டில்மேன் கதை. அதாவது ஆரம்பக்கதை . இப்போ அவர் எடுத்திருக்கும் கதை வேறு .ஆரம்பத்தில் கதை சொல்லும் பொழுது  பார்ப்பனிய பிள்ளையின் போர்குணம் குறித்த கதையாக இருந்தது. அப்போது இல்லைங்க...எனக்கு விருப்பம் இல்லைங்க..நான் பண்ணுறதா இல்லை அப்படினு சொல்லி ஒதுங்கிட்டேன் . அப்படியே நீங்க செய்யுறதா இருந்தா கூட  அதுல சில மாற்றங்களை செய்துகொள்ளுங்கள் என்றேன்.


அதன் பிறகு அவர்கள் மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். அந்த படத்துல என்னால ஒன்ற முடியல. இந்தியன் படத்துல ஒரே ஒரு இடத்துல மாறுபட்ட கருத்து இருந்தாலும்  கண்டிப்பாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்பதில்  சந்தேகமே இல்லை. அதில் பாசிசம் தொனி கொஞ்சம் அதிகமாக இருந்தது மற்றப்படி எனக்கு பிடித்த படம்தான்.


அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து , சாப்பிடாமல் ஷூட்டிங் சென்றேன் என்றால் அந்த கதாபாத்திரம் மீது எனக்கு இனம் புரியாத ஈடுபாடுதான்  . நான் கதாபாத்திரங்களுக்கு செய்யும் வேடங்கள் எனக்கு சிரமமே இல்லை. என்னுடைய தொழிலில் ஒரு அங்கம்தான் . பிடிக்காத ஒரு விசயத்தை செய்தால்தானே சிரமம். அப்படியானால் மேக்கப்பே போடக்கூடாது . ஆடியன்ஸுக்கு பிடிக்காத ஒன்றை செய்தால்தான் சிரமம். அப்படி பார்த்தால் சிங்கார வேலன் கேரக்டர் எனக்கு பிடிக்காது. அதை செய்து நான் ஆடியன்ஸைதான் வருத்தியிருக்கிறேன். பிடிச்சுதானே செய்யுறோம் இந்த வேலையை , அதற்கு சம்பளம் வேறு கொடுக்கிறார்கள் . அதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது “ என கமல்ஹாசன் திறந்த புத்தகமாக வெளிப்படை பதிலை கொடுத்திருந்தார்