‘பத்தல பத்தல’ பாடலை பாடி அசத்திய பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தியை நேரில் வரவழைத்த கமல்ஹாசன் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் அவருக்கு ஏஆர் ரகுமான் இசைப்பள்ளியில் படிக்கும் வாய்ப்பையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியாகி அரை மாதம் கடந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் விக்ரம் திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் விக்ரம் திரைப்படம் உலக அளவில் 360 கோடிக்கு மேல் வசூல் செய்து பயணித்து வருகிறது.
விக்ரம்’படம் பிரமாண்ட வெற்றியை பெற்றதையடுத்து இயக்குநர் லோகேஷூக்கு காரும், துணை இயக்குநர்களுக்கு பைக்கும், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்ஹாசன்.
இந்நிலையில் பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி பத்தல பத்தல பாடலை பாடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
கமல்ஹாசன் குரலிலேயே பிளாஸ்டிக் வாளியில் இசையை உருவாக்கி அந்தப்பாடலை பாடி இருந்தார் திருமூர்த்தி. அந்த பத்தல வீடியோ சாங் இணையத்தில் ஹிட் அடித்தது. பாடலை பாடி கமலை கண்முன்னே கொண்டு வந்ததாக பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில் திருமூர்த்தியின் பாடல் கமல் வரை சென்றுள்ளது. உடனடியாக திருமூர்த்தியை நேரில் அழைத்த கமல் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இசைக்கலைஞர் ஆகவேண்டுமென்ற திருமூர்த்தியின் ஆசையை கேட்டுத்தெரிந்துகொண்ட கமல் உடனடியாக இதுகுறித்து ஏஆர் ரகுமானிடமும் பேசியுள்ளார்.
அதன்படி தன்னுடைய கேஎம் மியூசிக் கன்செர்வட்டரி இசைப்பள்ளியில் திருமூர்த்தியை சேர்த்துக்கொள்ள ரகுமானும் உறுதி அளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழு செலவையும் தான் ஏற்பதாக கமல் உறுதிஅளித்துள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்