கேரள பேரிடர் நிவாரண நிதி :


கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதியே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகியுள்ளது. இதுவரை நிலச்சரிவினால் அங்கு 316 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை. நான்காவது நாளாக தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வளைந்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். அதன்படி தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி கேரளாவுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டது. அதேபோல், அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 



பிரபலங்கள் வரிசையில் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, ஜோதிகா, கார்த்தி சார்பில் ரூ. 50 லட்சமும் வழங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கேரள பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். நயன்தாராவும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேரள அரசுக்கு 20 லட்ச ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.


விஜய் பற்றி பிரஷாந்த் :


நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் பிரசாந்த் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. வரும் 9ஆம் தேதி 'அந்தகன்' படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு இருந்த பிரஷாந்த், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம். யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு என்னுடைய ஆதரவு நிச்சயம் இருக்கும்.  


'ராயன்' படத்துக்கு கிடைத்த கௌரவம் :


இரண்டாவது முறையாக தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் 'ராயன்'. தனுஷின் 50வது படமான 'ராயன்' படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பலமுறை, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.'ராயன்' படம் வெளியான நாள் முதல் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் 'ராயன்' படத்துக்கு புதிய அங்கீகாரமாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தின் ஒரு பகுதியாக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரபூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.    


ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் சீசன் 2 :


கொரோனா காலகட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்க்விட் கேம் எனும் கொரியன் வெப் சீரிஸ் வெளியானது. எளிமையான போட்டிகளை கொண்டு உயிரை பறிக்கும் ஹாரர் தீமில் வெளியான இந்த சீரிஸ், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 1.65 பில்லியன் பார்வையாளர்களை பெற்று, ஒடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றாக உள்ள இந்த தொடரின் இரண்டாவது சீசன் வரும் டிசம்பர் 26ம் தேதி வெளியாக உள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 


'தங்கலான்' செகண்ட் சிங்கிள் :


பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறுவது போன்ற ஒரு கதைக்களத்தில் உருவாகியுள்ளது 'தங்கலான்' திரைப்படம். பசுபதி, பார்வதி மேனன், மாளவிகா மோகனன், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், அர்ஜூனன் அன்புதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி, பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மினுக்கி' பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.