தமிழகத்தில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல 2 ஆண்டு எல்எல்எம் படிப்புக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


எல்எல்பி படிப்பு


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Dr. Ambedkar Law University) கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சீர்மிகு சட்டப்பள்ளி உள்ளிட்ட அரசு சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் ஆகியவற்றில் மூன்றாண்டு எல்எல்பி (LLB) படிப்புகள் உள்ளன. குறிப்பாக பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ், பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ், பி.காம். எல்எல்பி ஹானர்ஸ் மற்றும் பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்பி ஹானர்ஸ் படிப்புகளும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன்.


இவற்றுக்கு மொத்தம் 2,530 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர https://www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர். சுமார் 16 ஆயிரம் மாணவர்கள் வரை இதற்கு விண்ணப்பித்து வந்தனர்.


என்ன தகுதி?


இதற்கு முறையே குறைந்தபட்சம் 60 சதவீதமும் 45 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் முறையே குறைந்தபட்சம் 55 சதவீதமும் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.  


அதேபோல சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 ஆகும். என்ஆர்ஐ மாணவர்கள் 200 டாலர்களைச் செலுத்த வேண்டும்.


ஆக.10 வரை நீட்டிப்பு


இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசித் தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 10ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல ஆக.5ஆம் தேதி முதுகலை எல்எல்எம் 2 ஆண்டு படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://tndalu.ac.in/pdf/3%20Year%20LL.B%20Degree%20Course%20Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முழு அறிவிக்கையைக் காணலாம்.


முதுகலை எல்எல்எம் 2 ஆண்டு படிப்புக்கு விண்ணப்பிக்க https://tndalu.emsecure.in/5YearsLaw/Documents/Notification%20for%20LL.M.%20Degree%20Course%20-%202024-2025.pdf


சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 044- 24641919/ 24957414


 கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndalu.ac.in/