தமிழ் சினிமாவின் மோசட் வான்டட் நடிகர்களில் ஒருவராக லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பிடிக்குள் அடக்கி வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். நடிகர் என்பதையும் கடந்து இயக்குநர் , பாடலாசிரியர், பாடகர் என பான் முகம் கொண்ட திறமையாளராக விளங்குகிறார். அவரின் நடிப்பு திறமை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. யதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம் என மிகவும் சிம்பிளாக கவர்ந்து இழுத்து விடும் ஒரு நடிகர்.
தனுஷ் ஏற்கனவே இயக்குநராக பா. பாண்டி படத்தில் மூலம் அறிமுகமாகிவிட்டார். அதை தொடர்ந்து இரண்டாவதாக அவர் இயக்கியுள்ள படம் 'ராயன்'. தன்னுடைய 50 வது படத்தை அவரே இயக்கியுள்ளார் என்பது மேலும் படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. கடந்த ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ராயன்' படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பலமுறை, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். பா. பாண்டி படத்தில் மிகவும் மென்மையான திரைக்கதையை தேர்ந்து எடுத்து இயக்கிய தனுஷ் அவரின் இரண்டாவது படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் தெறிக்க விட்டு இருந்தார். ஒரு இயக்குநராக அவர் எடுத்து கொண்ட மெனெக்கெடலை தாண்டியும் ஒரு நடிகராக வெகு சிறப்பாக நடித்துள்ளார்.
'ராயன்' படம் வெளியான நாள் முதல் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வரும் 'ராயன்' படம் முதல் வார இறுதியில் 60 கோடி வரை வசூலித்து இருப்பதாகவும் உலகளவில் அது 100 கோடியையும் தாண்டிவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தனுஷின் 'ராயன்' படத்துக்கு புதிதாக அங்கீகாரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது 'ராயன்' படத்தின் திரைக்கதை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தின் ஒரு பகுதியாக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வமான தகவலை பெருமிதத்துடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதே போல சில மாதங்களுக்கு முன்னர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் இதே போல ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம்பெற தேர்வாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.