33 years of Chankyan : தமிழகத்தில் வெள்ளி விழா கண்ட முதல் மலையாள படம்... சாணக்கியன் வெளியாகி 33 ஆண்டுகள்
மலையாள படங்கள் தமிழகத்தில் வெளியானால் அதற்கு சரியான வரவேற்பு அவ்வளவாக இருக்காதா காலகட்டத்தில் ஒரு மலையாள திரைப்படம் தமிழகத்தில் வெளியாகி சுமார் 365 நாட்கள் சிறப்பாக திரையரங்குகளில் ஓடி ரெகார்ட் பிரேக் செய்தது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியான "சிபிஐ டைரிக் குறிப்பு" திரைப்படம். அதனை தொடர்ந்து அடுத்ததாக தமிழகத்தில் அமோக வரவேற்பு பெற்ற மலையாள திரைப்படம் "சாணக்கியன்".
33 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்:
1989ம் ஆண்டு நவோதயா ஸ்டுடியோ தயாரிப்பில் டி. கே. இராஜீவ் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் "சாணக்கியன்". படத்தின் திரைக்கதையை சாப் ஜான் இயக்குனர் ராஜிவ் குமாரோடு இணைந்து எழுதினார். இருவருக்கும் இது தான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ஊர்மிளா மடோண்த்கர், ஜெயராம், மது, திலகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வணீக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மகத்தான வெற்றி பெற்றது. இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்படாமல் மலையாலத்திலேயே நேரடியாக வெளியாகி இந்த அளவிற்கு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் சாணக்கியன் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஹாஷ்டேக் 33 வருடமாக சாணக்கியன் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கமல் - ஜெயராம் செய்த தில்லாலங்கடி:
நடிகர் மம்மூட்டிக்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் ஆனால் அந்த வாய்ப்பு நடிகர் கமல்ஹாசனுக்கு வந்த போது மறுக்காமல் அதில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் குரலை நடிகர் ஜெயராமின் உதவியோடு மிமிக்கிரி செய்து அவரின் புகழை கெடுக்கும் அவரை பழிவாங்கும் கதாபாத்திரமாக நடித்திருப்பார். முதல்வரின் மகளாக ஊர்மிளா நடித்திருந்தார். கமல் - ஊர்மிளா இருவரும் இப்படத்தில் காதலர்கள். நடிகர் ஜெயராம் பொதுவாகவே ஒரு சிறந்த மிமிக்கிரி கலைஞன். அவரை இப்படத்திலும் மிமிக்கிரி கலைஞனாக நடிக்க வைத்தது இப்படத்தின் மற்றுமொரு சிறப்பு.
வெள்ளிவிழா கண்ட முதல் மலையாள படம்:
தமிழில் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. அந்த ஆண்டே சாணக்கியன் திரைப்படம் 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி அமோகமான வரவேற்பு பெற்று அதுவும் வெள்ளி விழா கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான திரையரங்குகளில் ஐம்பது நாட்கள் வெற்றிகரமாக தமிழகத்தில் ஓடிய முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை பெற்றது "சாணக்கியன்" திரைப்படம். படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ரசிகர்கள் இப்படத்தை நினைவு கூறுவது தான் படத்தின் உண்மையான வெற்றியின் அடையாளம்.