‛ஒரே ஒரு ப்ரெண்ட்ட வெச்சுட்டு நான் பட்ற பாடு இருக்கே.. நண்பேண்டா...’ என்கிற டயலாக்கை யாரும் மறந்து விட பாஸ்முடியாது. இளசுகள் எல்லாம், 2010ல் இருந்து இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், ஆர்யா-சந்தானம் கூட்டணியில் பட்டாசு தெறித்த பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடி தான்.
சிவா மனசுல சக்தி படத்திற்கு பின், இயக்குனர் எம்.ராஜேஷ் எடுத்த திரைப்படம். பட்டப்படிப்பு முடிக்காத ஒரு இளைஞர். கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் இளம் பெண்ணை விரும்புகிறார். அந்த பெண்ணின் அக்காவுக்கும் , இளைஞனின் அண்ணனுக்கும் தற்செயலாக திருமணம் ஆகிறது. படிப்பு முடிக்காமல், வேலையும் இல்லாமல் இருக்கும் இளைஞனுக்கு, தனது இரண்டாவது மகளை திருமணம் செய்ய மறுக்கிறார் தந்தை.
வீட்டிலும் சரியான மரியாதை இல்லாமல் சுயதொழில் தொடங்க வெளியேறி, பல தொழில்களை தொடங்கி இறுதியில் ஒரு தொழிலில் தீவிரமாகி அதில் ஜெயித்தாரா, பேராசிரியை கரம் பிடித்தாரா, குடும்பத்தார் ஏற்றார்களா என்பது தான் பாஸ் என்கிற பாஸ்கரன்.
பாஸ்கரனாக ஆர்யா, அவரது காதலியாக நயன்தாரா, அண்ணனாக சுப்பு, அண்ணியாக விஜயலட்சுமி, அதை விட முக்கியமாக பாஸ்கரன் நண்பராக சந்தானம். இப்படி , கலகலப்பான ஒரு குடும்ப காமெடி கதையை, நேர்த்தியாக கூறியிருப்பார் ராஜேஷ். குறிப்பாக ஆர்யா-சந்தானத்தின் காமெடி, அதன் பின் அடுத்தடுத்த படங்களில் அவர்களை வெற்றி கூட்டணியாக மாற்றியது.
ராஜேஷ் இயக்கிய படத்தில், இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடப்பதாக கூறப்படுவதும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் தான். அந்த அளவிற்கு, வெளியான 2010ல் பெரிய அளவில் வெற்றியை பெற்ற திரைப்படம். யுவன்சங்கர்ராஜாவின் இசையும், சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் படத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கும்.
கலகலப்பான ஒரு கதையை, அதன் ரசம் கொஞ்சமும் மாறாமல், அப்படியே அள்ளித்தந்த ராஜேஷ், அதன் பின் அதே ஃபார்முலாவை தொடரும் அளவிற்கு, அவருக்கு பெரிய நம்பிக்கை தந்த படம், ‛பாஸ் என்கிற பாஸ்கரன்’. 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இன்றும் தொலைக்காட்சிகளில் மாதம் ஒரு முறை இடம் பெறும் திரைப்படம்.