நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்திருக்கும் `விக்ரம்’ படத்தின் வெற்றி மூலமாக மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதுகுறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் வெற்றி தன்னை நெகிழ வைத்திருப்பதாகவும், இதுபோல உணர்ச்சிகரமாக உணர்ந்தது இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்பை எப்படி திருப்பி தருவது என சிந்திப்பது குறித்தும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் அவரிடம் இந்த வெற்றியோடு மனநிறைவு அடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர்கள் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா முதலானோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள `விக்ரம்’ திரைப்படம் வெளியாகி மூன்றே நாள்களில் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `நான் இப்போது போல இதுவரை உணர்ச்சிகரமாக இருந்ததே இல்லை. என் மீதும், `விக்ரம்’ படத்தின் மீதும் நீங்கள் காட்டிய அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீங்கள் காட்டிய அன்பை எப்படி மீண்டும் உங்களிடம் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. கமல் ஹாசன் சாருக்கும், எனது குழுவினருக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.. லவ் யூ ஆல்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள நடிகர் கமல் ஹாசன், `ரசிகர்களிடம் வைத்திருக்கும் கடனை அடைக்கும் ஒரே வழி, மன நிறைவு அடையாமல் இருப்பது தான். மீண்டும் மக்களுக்குப் பிடித்தவாறான கடும் உழைப்பைக் கொடுத்தால் மக்கள் எப்போதும் மதிப்பார்கள். எனது ஊக்கம் அனைத்தும் மக்களின் அன்பில் இருந்து வருகிறது. உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இப்போது உங்களை ஆதரித்ததைப் போல எப்போதும் உங்களை ஆதரிக்கும்’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா கௌரவத் தோற்றத்தில் `விக்ரம்’ படத்தில் நடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து `கைதி 2’ படத்திலும், `விக்ரம்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும் முக்கிய வில்லனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.