ஜாமீன் மனுவை திறம்ப பெற உத்தரவு:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர். தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது குறித்து, மதுரைக்கிளை முடிவெடுக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்து, ஜாமீன் மனுவை திரும்ப பெற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சாகும்வரை சிறை:
நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
யுவராஜ் தரப்பு:
இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சிசிடிவி காட்சிகளை பொறுத்தவரை கோகுல்ராஜை கடத்தியதாகவோ, கொலை செய்ததாகவோ பதிவுகள் இல்லை. ஆனால் அவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைப்பதோடு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என யுவராஜ் தரப்பினர் கூறியுள்ளனர்.
நீதிபதிகள் தரப்பு:
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு, ஜாமீனை பொறுத்தவரை வழக்கு விசாரணையில் இருந்த போது, உச்சநீதிமன்றம் ஜாமீன் மனுவை ரத்து செய்துள்ளது. தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது குறித்து, முடிவெடுக்க இயலாது. ஆகவே அந்த மனுவை திரும்பப்பெற வேண்டும். தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் என குறிப்பிட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்திலிருந்து பெற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
வழக்கு ஒத்திவைப்பு:
நீதிமன்றத்தில் கோகுல்ராஜின் தாயார் ஆஜராகி, ஜாமின் வழங்கக்கூடாது என கையெடுத்துக் கும்பிட்டு, கண்ணீர் விட்டபடி கோரினார். அதோடு, தானே வழக்கறிஞரை நியமித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்