தன்னுடைய புதிய திரைப்படமான `விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பல்வேறு விவகாரங்களைத் தொட்டுப் பேசியுள்ளார் நடிகர் கமல் ஹாசன். சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கமல் ஹாசனின் முதல் திரைப்பட நிகழ்ச்சியாக, `விக்ரம்’ படத்தின் ட்ரைலர், இசை ஆகியவற்றின் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, `விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, கமல் ஹாசனின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 


பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்களுடன் தனது உறவு குறித்து பேசுவதற்காக `விக்ரம்’ விழா மேடையைப் பயன்படுத்தினார் கமல் ஹாசன். மேலும், அரசியல் வேறுபாடுகள் காரணமாக தன் நட்பை இழக்காத பக்குவம் கொண்ட நண்பர்களைத் தான் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார் நடிகர் கமல் ஹாசன். மேலும், சினிமா, அரசியல் ஆகியவற்றில் தனது ஆரோக்கியமான போட்டி தொடரும் எனக் கூறிய நடிகர் கமல் ஹாசன், அதற்கு உதாரணமாக அவருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையிலான நட்பைச் சுட்டிக் காட்டியுள்ளார். 



`இந்தப் படத்தில் `ரெட் ஜெயிண்ட்’ பணியாற்றியிருக்கிறது. பலரும் `என்ன சார் இது?’ எனக் கேட்டார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல நண்பர். நானும் ரஜினியும் ஒரே நேரத்தில் நல்ல நண்பர்களாகவும், நல்ல போட்டியாளர்களாகவும் இருக்கிறோம். நீங்கள் அடிக்கடி அணி மாற்றிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் எதிராக பேசுகிறீர்கள். நாங்கள் அப்படி பேசுவதில்லை. எங்களுக்குத் தெரியும். எங்களுடைய 25வது வயதில் எங்கள் பயணத்தை முன்கூட்டியே கணித்து, அது எப்படி முடிய வேண்டும் என்பதைப் பேசியிருக்கிறோம். எனவே எங்கள் நட்பு மீதான மரியாதைக்கு ஏற்ப நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது இன்றும் மாறவில்லை. இன்றுகூட, இந்த நிகழ்ச்சிக்கு ரஜினியால் வர முடியாத போதும், அதுகுறித்து அவசரமாக விளக்குவதற்காக ரஜினி என்னிடம் பேசினார். அப்படியானது எங்களின் நட்பு!’ என `விக்ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார் நடிகர் கமல் ஹாசன். 


உதயநிதி ஸ்டாலின் `ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ இந்தத் திரைப்படத்தை வெளியிடவுள்ள நிலையில், நடிகர் கமல் ஹாசன் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது தனது மக்கள் நீதி மய்யம் கட்சி மூலமாக உதயநிதி ஸ்டாலின் சார்ந்துள்ள திமுகவைக் கடுமையாக எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 



`நான் ஏற்கனவே `மைனா’, `மன்மதன் அம்பு’ ஆகிய படங்களில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்திருக்கிறேன். பிறகு இருவருமே அரசியலுக்கு வந்துவிட்டோம். சாலையில் ஒரு பக்கத்தில் அவரும், மறுபக்கத்தில் நானும் இருக்கிறோம். எங்களுக்கு நடுவில் டிராஃபிக் இருந்தாலும், நட்பு எப்போதும் இருக்கிறது. அவர் என்னை அழைத்து, இந்தப் படத்தை வெளியிடுவது குறித்த தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். நான் அவரிடம் அரசியலும், சினிமாவும் வேறு வேறு என்றும், அதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினேன். அவர் உடனே ஒப்புக்கொண்டார். மேலும், அவர் என்னுடைய ரசிகர் எனக் கூறினார்.. அதற்கு மேல் என்னால் அதுவும் கூற முடியவில்லை’ எனவும் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். 


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ள `விக்ரம்’ படத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா, ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன் முதலானோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வரும் ஜூன் 3 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.