அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பல மாற்றங்களைச் செய்வார் என நம்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


மாமன்னன் இசை வெளியீட்டு விழா


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ள படம் “மாமன்னன்”.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர உள்ளது. 


பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்றனர். 


உதயநிதிக்கு அட்வைஸ் சொன்ன கமல் 


உயிரே...உறவே.. தமிழே.. வணக்கம். பல மேடைகளில் படத்தை வாழ்த்துவோம். அதாவது படத்தை பார்க்காமலேயே நன்றாக வர வேண்டும் என நல்ல எண்ணத்தில் பேசுவோம். ஆனால் நான் படம் பார்த்துவிட்டேன். இந்த படத்தை வாழ்த்துவதை விட இது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பது எனது ஆசை. நட்புக்காக மட்டும் இதை சொல்லவில்லை.  இப்படத்தின் குரல் கேட்கப்பட வேண்டியது. அது மாரி செல்வராஜின் குரல் அல்ல. பலகோடி பேரின் குரல். அது இப்பதான் கேட்க ஆரம்பித்துள்ளது. மாமன்னன் படம் மாரியின் அரசியல் என உதயநிதி சொன்னார்.


ஆனால் இது நம் அரசியல், அப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தலைமுறைகள் நாம். அதற்கு இந்த மாதிரி படங்கள் வேண்டும். அதை தேர்ந்தெடுத்த உங்களுக்கு என் பாராட்டுகள். எனக்கு சின்ன வருத்தம். உதயநிதியை குறிப்பிட்டுஎன்னுடன் படம் பண்ண போறீங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். பரவாயில்லை. இதுவும் என் படம்தான். என்னை பொறுத்தவரை இது எனது அரசியலும்தான். இந்த படம் வெற்றி பெற பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது  வடிவேலு. அவர் நடிப்பிலும் மாமன்னனாக இருக்கிறார். 


வடிவேலுவின் நடிப்பை ஆரம்பக்கட்டத்தில் நானும், இளையராஜாவும் ரசித்தவர்கள். அதனால் தான் தேவர் மகன் படத்தில் என்னுடைய நடிப்பையும் வடிவேலு தாங்கிப் பிடித்தார். ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு மூன்று தலைமுறைகள் மயங்கிக்கொண்டு இருக்கிறது. கற்றுக்கொள்ள வயது முக்கியம் இல்லை என நிரூபிக்கிறார். 


மாரி செல்வராஜ் தனது படங்களில் எதிர்தரப்புக்கு கூட சமமான இடம் கொடுக்க முயற்சி பண்ணுவது அவரது சமநிலையை காட்டுகிறது. நாம சண்டை போடும்போது நம்ம பக்கம் நியாயம் இருக்க வேண்டும். கோபம் மட்டும் இருந்தா போதாது. மாரி பக்கம் நியாயம் இருக்குது. அதற்கு வழி அமைத்து கொடுத்த உதயநிதிக்கு நன்றி. இதேபோல் அமைச்சராகவும், இதே தெளிவுடன் பல தேர்வுகளையும் மாற்றங்களையும் உதயநிதி செய்வார் என நான் நம்புகிறேன். 


நான் இவ்விழாவை தலைமை தாங்கவில்லை. என் தோளில் தாங்குகிறேன். இப்படத்தின் வெற்றி தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையையும், தரத்தையும் நமக்கு சொல்லும். சமூக நீதி தொடர்பான உரையாடல் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல தலைமுறையை நாம் விட்டுச் செல்வோம்.