நடிகர் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த விக்ரம் படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்தது.


 






இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப்படியான வசூலை ஈட்டிய திரைப்படமாக திகழ்கிறது ’விக்ரம்’ திரைப்படம். மகத்தான வெற்றிபெற்ற இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.


இந்நிலையில், பிரபல சர்வதேச திரைப்பட விழாவான பூசான் திரைப்பட விழாவில் திரையிடப்பட விக்ரம் தேர்வாகியுள்ளது. இது குறித்து ராஜ் கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.


 






அக்டோபர் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது.


வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.