லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம், ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


உலகம் முழுவதும் வசூல் சாதனை


அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படம் வெளியான நாள் முதலே தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் நள்ளிரவில் கூடுதல் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 




விக்ரம் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25 கோடி வசூலைப் படைத்து கமலின் திரையுலக வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் விரைவில் தமிழ்நாட்டிலும் இப்படம் ரூ.100 கோடி வசூலைப் பெற்று சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


இந்தி வட்டாரத்தில் இறங்குமுகம்


எனினும் பான் இந்தியா படமாக வெளியான விக்ரம் இந்தி வட்டாரத்தில் எதிர்பார்த்த அளவு வசூலைக் குவிக்கவில்லை என தமிழ் சினிமா வட்டாரத்தினர் கவலைத் தெரிவித்துள்ளனர்.


 






ஆர் ஆர் ஆர், 4கேஜிஎஃப் 2 படங்களின் வரிசையில் தென்னிந்திய பான் இந்தியா படமான விக்ரம் படத்தின் ப்ரொமோஷன் பணிகளையும் படக்குழு சிறப்பான முறையில் மேற்கொண்டது.


சாதனையை தக்க வைத்துள்ள 2.0


எனினும் படத்தின் வசூல் இந்தி வட்டாரத்தில் மட்டும் எதிர்ப்பார்த்த வகையில் இல்லாததாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்தி வட்டாரத்தில் பெரும் வசூலைக் குவித்த கோலிவுட் படம்  ரஜினி - இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவான 2.0 திரைப்படம் மட்டுமே என்றும், 2.0 படம் இந்தி வட்டாரத்தில் 275 கோடி வசூல் சாதனை புரிந்ததாகவும் கூறப்படுகிறது.




தன் நடிப்பு பயணத்தின் தொடக்க காலமான 80களிலேயே, 'ஏக் துஜே கேலியே’ படம் மூலம் இந்தி ஆடியன்ஸ்களின் மனதைக் கவர்ந்து பான் இந்திய நட்ச்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அவரது விக்ரம் படம் தற்போது அங்கு எடுபடாதது கோலிவுட் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.