Cryptocurrency Scam : 2021ஆம் ஆண்டு தொடங்கியது முதல், க்ரிப்டோ கரன்சி மோசடிகளால் சுமார் 46 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டிருப்பதுடன், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை இழந்திருப்பதாகவும், அமெரிக்க அரசின் ஃபெடரல் ட்ரேட் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


க்ரிப்டோ கரன்சி மூலம் பணம் இழந்தவர்களுள் சுமார் பாதிக்கும் மேற்பட்டோர் விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களில் வரும் மெசேஜ்கள் முதலானவற்றைக் க்ளிக் செய்து பணம் இழந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டு, க்ரிப்டோ கரன்சி மீதான அதிகரித்த ஆர்வம் காரணமாக அதன் விலை மதிப்பு கடந்த நவம்பர் மாதத்தின் போது சுமார் 69 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற அளவிற்கு அதிகரித்தது. இந்திய மதிப்பில் இது சுமார் 53.6 லட்சம் ரூபாய் ஆகும். எனினும், தற்போதைய பிட்காயின் விலை, இந்திய மதிப்பின்படி சுமார் 24 லட்சம் ரூபாய். 



க்ரிப்டோ கரன்சி பயன்படுத்துவதும், சமூக வலைத்தளங்களை அதோடு இணைப்பதும் மோசடிக்கான பெரும்பாலான காரணமாக இருப்பதாக ஃபெடரல் ட்ரேட் கமிஷன் அறிக்கையில் கூரப்பட்டுள்ளது. `மோசடியான முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற பிரிவின் கீழ் இதுவரை சுமார் 575 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 


சமூக வலைத்தளங்களில் மோசடியால் ஏமாற்றப்படும் பத்து டாலர்களில் சுமார் 4 டாலர்கள் வரை க்ரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளால் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதிகம் பணம் இழந்தவர்களால் பயன்படுத்தப்பட்ட சமூக வலைத்தளங்களின் பட்டியலில், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்சாப், டெலிகிராம் முதலானவை இருக்கின்றன. 



சராசரியாக தனிநபர் ஒருவருக்கும் சுமார் 2600 அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய். மேலும், பிட்காயின், டெதர், ஈத்தர் ஆகிய க்ரிப்டோ கரன்சிகள் மூலமாக அதிகளவில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன. 






கடந்த மே மாதத்தின் போது, டாக் காயின் இணை நிறுவனர் பில்லி மார்கஸ் சுமார் 95 சதவிகிதமான க்ரிப்டோ கரன்சி என்பது மோசடி எனவும், க்ரிப்டோ துறை மீதான பொது மக்களின் பார்வை மாற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். க்ரிப்டோ கரன்சி தொடங்கப்பட்டதன் முதலே, பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபடுவோரிடையே கெட்ட பெயரைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன் பதிவால் கோபப்படுவோரும், தன்னைத் திட்டுவோரும் `க்ரிப்டோ மோசடியாளர்கள்’ எனவும் பில்லி மார்கஸ் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, ட்விட்டரில் இருக்கும் க்ரிப்டோ பயனாளர்களிடையே விவாதத்தையும் ஏற்படுத்தியது.