2006ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. 


வேட்டையாடு விளையாடு:


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்று இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.




மேலும் அன்றைய காலக்கட்டத்தில் வெளியான ரஜினி திரைப்படமான ‘படையப்பா’ படத்தின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்தது. கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்த இப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக சிலாகிக்கப்பட்டு வருகிறது.


மேலும், பெண்களை கடத்தி கொலை செய்யும் சீரியல் கொலைகாரர்கள், அவர்களை பிடிக்க செல்லும் ராகவன் எனும் நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு ஏற்படும் இழப்புகள் என சஸ்பென்ஸ் விருந்து வைத்த இத்திரைப்படம், மறுபுறம் தன்பால் ஈர்ப்பாளர்களாக வில்லன்களைக் காண்பித்ததற்காக கடும் எதிர்ப்புகளையும் பெற்றது.


ரீ ரிலீஸ்:


ஆனால் இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி இப்படம் இன்று வரை கல்ட் கிளாசிக் க்ரைம் த்ரில்லர் படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ- மாஸ்டர் செய்யப்பட்டு வரும் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், பட ரிலீஸை எதிர்பார்த்து கமல் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.


முன்னதாக வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆலோசித்து வருவதாக இயக்குநர் கௌதம் மேனன் நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். 


150 பக்கத்திற்கு வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ஆம் பாகம் கதை ரெடியாக இருப்பதாகவும் அடுத்த படமாக வேட்டையாடு விளையாடு திரைப்படம் அமைந்தால் அது தனக்கு மகிழ்ச்சி என்றும் கௌதம் மேனன் தெரிவித்திருந்தார்.