நடிகர் விஜய்க்கும், தனக்குமான நட்பு குறித்து நடிகர் சித்தார்த் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


உதவி இயக்குநராக இருந்து தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். நடிகர், பாடகர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட சித்தார்த் தன் கேரக்டருக்கு வலுசேர்க்கும் கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். காதல் சர்ச்சை, அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனம் என தன்னைச் சுற்றி எப்பவுமே பரபரப்பாக இருக்கும் நிலையில் சித்தார்த் நடித்து “டக்கர்” படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. 


இந்த படம் தொடர்பாக தொடர்ச்சியாக ப்ரோமோஷனில் சித்தார்த் கலந்து கொண்டார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளார்.  அந்நிகழ்ச்சியில்  நடிகர் விஜய் ஒரு வீடியோவில் சித்தார்த்தை புகழ்ந்து பேசி இருப்பார். அந்த வீடியோ காட்டப்பட்டது.  அதில்,”பொதுவாகவே எனக்கு சித்தார்த்தை பிடிக்கும். அவர் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்களை நான் பார்த்துள்ளேன். ரொம்ப க்யூட்டான ஒரு நடிகர் என விஜய் தெரிவித்திருந்தார். இதனை குறிப்பிட்டு சித்தார்த்திடம் கேள்வி கேட்கப்பட்டது. 


அதற்கு, “என்னை க்யூட்ன்னு சொல்லும் விஜயை விட க்யூட்டாக யார் இருப்பார் என சொல்லுங்கள் என தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் தங்கியிருந்த ஹோட்டலில் கீழ்த்தளத்தில் அவர் தங்கி இருந்தார். நாங்கள் இருவரும் போய் டின்னர் சாப்பிட்டோம்.  நான் அவரை விஜய் என்று தான் அழைப்பேன். இதை பார்த்துவிட்டு சிலர் அப்படி கூப்பிட வேண்டும், மரியாதையுடன் கூப்பிட வேண்டும் என சொல்வார்கள். 


ஆனால் விஜய் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. அவர் மிகவும் நார்மலான க்யூட்டான ஒரு ஆள். அவருக்கு நான் நடித்த பொம்மரிலு படம் மிகவும் பிடிக்கும். அந்த படத்தை பார்த்துவிட்டு என்னிடம் இந்த சீன் எப்படி நடித்தாய், இந்தப் பாடலில் அந்த நடன அசைவு எப்படி வந்தது என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.


அப்போது போனில் எடுத்து வீடியோ எல்லாம் காட்டிக் கேட்க முடியாது. அதனால் அவர் நடித்துக் காட்டுகிறார். நான் அதை பார்த்துவிட்டு, “நீங்கள் பண்ணுவது சூப்பராக உள்ளது. நான் இப்படி பண்ணவில்லையே” என சொல்வேன். ஆனால் விஜய்யோ, “ஏய் நீ எப்படி இதை பண்ணினாய் என சொல்லிக் காட்டு” என கேட்பார். அவர் காட்டும் அன்பைப் போல் வேறு யாரும் காட்ட முடியாது என நான் நினைக்கிறேன். நீங்கள் பார்த்த வீடியோ 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதே போல் 2014 ஆம் ஆண்டு காவியத்தலைவன் படம் பார்த்துவிட்டு ஒரு வீடியோ அனுப்பினார்.


நான் விஜய்யை எங்க பார்த்தாலும் கட்டிப்பிடித்துக் கொண்டு ரொம்ப நேரம் விடவே மாட்டேன். எனக்கு அவரையும், அவருக்கு என்னையும் மிகவும் பிடிக்கும். என்னதான் அவரை சூப்பர் ஸ்டார் என பல பட்டங்கள் சொல்லி அழைத்தாலும் நான் கல்லூரியில் படித்த சமயம் விஜயின் ரசிகராக இருந்ததை மறக்க முடியாது. குறிப்பாக அவர் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வைக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் அவர் மற்றவரிடம் எப்படி இருந்தாரோ என்னிடம் எப்படி இருந்தாரோ அதை அப்படியே இருக்க வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என சித்தார்த் தெரிவித்துள்ளார்