ஐசிசி-யின் உலகக்கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களை சந்தாதாரர்கள் இலவசமாக பார்க்கலாம் என, டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், இந்த சலுகை செல்போன் பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹாட்-ஸ்டார் அறிக்கை:


கிரிக்கெட் விளையாட்டை ஜனநாயகப்படுத்துவதை மையமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹாட்-ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகிய இரண்டு கிரிக்கெட் தொடர்களின் ஒளிபரப்பையும்,  அனைத்து மொபைல் போன் பயனர்களுக்கும் இலவசமாக பார்க்கலாம். 


நோக்கம் என்ன?


நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பார்வையாளர்கள் கணக்கில், இதுவரை இல்லாத அளவிற்கு டிஸ்னி ஸ்டார் நிறுவனம் புதிய சாதனையை எட்டியது. அதைதொடர்ந்து தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது மொபைல் பயனர்களின் எண்ணிக்கையை இந்த இரண்டு போட்டிகளின் மூலம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள 54 கோடிக்கும் அதிகமான மொபைல் பயனர்கள் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இலவசமாகப் பார்க்க முடியும்” என்று ஹாட்-ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஹாட்-ஸ்டார்:


பல ஆண்டுகளாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளுக்கான வலுவான பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு பெயர் பெற்றது. ஐபிஎல் தொடர், ஆசியா கோப்பை 2022, ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022, ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இந்தியா மற்றும் இலங்கை போட்டி போன்ற பல விளையாட்டுகளுக்கு இந்த தளம் பெரும் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.


வாய்ப்பை இழந்த ஹாட்-ஸ்டார்:


இதனிடையே, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் ஜியோ நிறுவனத்திடம் இழந்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஐபிஎல் தொடரை அந்த நிறுவனம் தான் ஒளிபரப்ப உள்ள சூழலில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என அறிவித்தது. இதனால், ஹாட்ஸ்டார் நிறுவனம் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை இழந்தது. இந்த நிலையில் தான், ஆசியக்கோப்பை மற்றும் ஐசிசி உலகக்கோப்பை தொடரை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. தற்போது வரை அந்த நிறுவனம் 5.3 கோடி சந்தாதாரர்களை இந்தியாவில் கொண்டுள்ளது. 


ஜியோ சினிமா செயலி:


ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனம், 2.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியுள்ளது. அதோடு, வார்னர் ப்ரோஸ் போன்ற பல முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பல முக்கிய ஹாலிவுட் படங்களை ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளது. அதோடு, ஆண்டுக்கு 999 ரூபாய் என்ற புதிய சந்தா திட்டத்தையும் அண்மையில் ஜியோ நிறுவனம் அறிவித்தது.