தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் வெற்றிமாறன். முதல் படத்திலேயே அழுத்தமான திரைக்கதையை அமைத்ததின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த வெற்றி மாறன், அடுத்ததாகவும் தனுஷுடன் இணைந்து  'ஆடுகளம்' படத்தை இயக்கினார்.


இந்தப்படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உட்பட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் சந்திர குமார் எழுதிய லாக்கப் நாவலை தழுவி விசாரணை என்ற படத்தை இயக்கினார். இந்தப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இப்படி தான் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள் மூலம் தொடர்ந்து கவனம் பெற்ற வெற்றி மாறன் அடுத்ததாக வடசென்னை படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. 




அதனைத் தொடர்ந்து  ‘அசுரன்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும்  ‘விடுதலை’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அடுத்ததாக சூர்யாவை வைத்து  ‘வாடி வாசல்’ படத்தை  இயக்க இருக்கிறார். சி. சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது.






 


 


இதனிடையே நடிகர் விஜயை சந்தித்து கதை கூறிய வெற்றிமாறனிடம், உங்களுடைய கமிட்மெண்ட்ஸ் அனைத்தையும் முடித்துவிட்டு வாருங்கள்.. என்று கூறியதாக அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்திருந்தார்.




இந்தநிலையில் அண்மையில் நடிகர் கமலை சந்தித்தார் வெற்றிமாறன். இதனிடையே இருவரும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இவர்கள் இணைந்து படம் எடுப்பதாக கூறி ஒரு போஸ்டர் நேற்று முதல் சமூகவலைதளங்களில் உலாவி வருகிறது. 






 


அதில்  ‘ராயன்’ என்ற படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும், இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இடையமைக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளஙளில் வைரலாகி வருகிறது.